சினிமா செய்திகள்

மடோனா செபாஸ்டியனின் “ஹார்ட்டின்” படத்தின் டிரெய்லர் வெளியானது

கிஷோர் குமார் இயக்கத்தில் சனந்த், மடோனா செபாஸ்டியன், இமயா நடித்துள்ள ‘ஹார்டின்’ படம் ஜூன் 26ம் தேதி வெளியாகவுள்ளது.

மலையாளத்தில் வெளியான ‘பிரேமம்’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகை மடோனா செபாஸ்டியன், தொடர்ந்து தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிப் படங்களில் நடித்து வருகிறார். தமிழில் ‘காதலும் கடந்து போகும்’, ‘கவண்’, ‘ப பாண்டி’, ‘ஜூங்கா’, ‘வானம் கொட்டட்டும்’, ‘லியோ’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள அவர், தற்போது ‘ஹார்டின்’ என்ற புதிய படத்தில் நடித்துள்ளார்.

அறிமுக இயக்குநர் கிஷோர் குமார் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் ‘ஹார்டின்’. கிஷோர் குறும் படங்கள், வெப் தொடர்கள் இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் நாயகனாக சனந்த் நடிக்கிறார். இவர் ‘பேட்ட’ படத்தில் நடித்துள்ளார். நாயகிகளாக மடோனா செபாஸ்டியன் மற்றும் இமயா ஆகியோர் நடிக்கின்றனர். இதில் இமயா தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுவின் மகள். இவர் இப்படம் மூலம் நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். டிரைடென்ட் ஆர்ட்ஸ் ஆர். ரவீந்திரன் இப்படத்தை தயாரித்துள்ளார். ராஜேஷ் முருகேசன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

கதை கேட்டவுடனே கவர்ந்த ‘ஹார்டின்’

‘ஹார்டின்’ திரைப்படத்தின் புரமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய மடோனா செபாஸ்டியன், படத்தின் கதை தன்னை முதல் முறையிலேயே கவர்ந்ததாக தெரிவித்தார்.

“இயக்குநர் கிஷோர் குமார் ‘ஹார்டின்’ படத்தின் கதையை சொல்லும்போதே அந்தக் கதையுடன் ஒன்றிவிட்டேன். கதையின் உணர்வுகளும், அதில் இருந்த புதுமையும் என்னை மிகவும் ஈர்த்தது” என்று கூறியிருந்தார்.

மேலும் அவர் பேசுகையில், “‘ஹார்டின்’ திரைப்படம் காதல், நகைச்சுவை மற்றும் உணர்வுகளை புதுமையான முறையில் சொல்லும் படைப்பாக இருக்கும். இந்த படம் பார்வையாளர்களின் மனதில் புத்துணர்ச்சியை ஏற்படுத்தும் என்று நான் நம்புகிறேன். உங்கள் அன்புக்குரியவர்களுடன் இந்தப் படத்தை திறந்த மனதுடன் பாருங்கள். உண்மையாகவே இந்த படம் உங்களுக்கு பிடிக்கும். ரசிகர்கள் அனைவரும் இப்படத்திற்கு ஆதரவு அளிப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்று தெரிவித்தார்.

‘ஹார்டின்’ திரைப்படம் குறித்து பேசிய இயக்குநர் கிஷோர் குமார், “ரோம்-காம் என்று சொல்லப்படும் நகைச்சுவை கலந்த காதல் கதை இது. அனைத்து ரசிகர்களுக்கும் பிடிக்கும் வகையில் உருவாக்கி வருகிறோம். சென்னை, ஜெய்ப்பூர் மற்றும் ஊட்டி உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது. தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுவின் மகள் இமயா திரைக்கதை நுட்பங்களைப் பாடமாக எடுத்து நியூயார்க்கில் படித்துவிட்டு வந்திருக்கிறார். அதனால் இதன் திரைக்கதையில் அவருடைய பங்களிப்பும் இருக்கிறது. இந்த படம் இரண்டு பெண்களின் பார்வையில் சொல்லப்படும் கதையை கொண்டது” என்கிறார் இயக்குனர்.

இந்நிலையில், ‘ஹார்ட்டின்’ படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படம் வரும் ஜூன் 26ம் தேதி வெளியாகவுள்ளது.

ரொமான்டிக் காமெடி கதைக்களத்தில் உருவாகியுள்ள ‘ஹார்டின்’ திரைப்படம், இளைஞர்கள் மற்றும் குடும்ப ரசிகர்களை கவரும் படமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு திரையுலகில் நிலவி வருகிறது.