சினிமா செய்திகள்

பான்மசாலா விளம்பரம்: ஷாருக்கான், அஜய் தேவ்கனுக்கு மகாராஷ்டிர அரசு நோட்டீஸ்

‘விமல் ஏலக்காய்’ விளம்பரத்தில் நடித்த இந்தி நடிகர்கள் ஷாருக்கான், அஜய் தேவ்கன், டைகர் ஷெராஃப் ஆகியோருக்கு மகாராஷ்டிரா உணவு மற்றும் மருந்து நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பாலிவுட் நடிகர் ஷாருக்கான், அஜய் தேவ்கன் மற்றும் டைகர் ஷ்ராப் ஆகியோர் தடை செய்யப்பட்ட பான் மசாலா விளம்பரத்தில் நடித்ததற்காக மகாராஷ்டிரா உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மகாராஷ்டிராவில் பான் மசாலாவிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பாலிவுட் நடிகர்கள் ஷாருக்கான், அஜய் தேவ்கன் மற்றும் டைகர் ஷெராஃப் ஆகியோர் விமல் என்ற பான் மசாலா நிறுவனத்தின் ஏலக்காய் விளம்பரத்தில் நடித்திருந்தனர். இது தொடர்பாக அவர்கள் நடித்த விளம்பரம் தொடர்ந்து அனைத்து வகையான மீடியாக்களிலும் வந்து கொண்டிருக்கிறது. மகாராஷ்டிராவில் தற்போது உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை மாநிலம் முழுவதும் கலப்படம், உணவகங்களில் சுத்தம் போன்றவற்றை உறுதி செய்ய தொடர்ந்து ரெய்டு நடத்தி வருகிறது.

பல முன்னணி உணவகங்கள் சரியாக சுத்தத்தை பின்பற்றவில்லை என்றும், காலாவதியான உணவுப்பொருள்களை வைத்திருந்ததாகவும் கூறி சீல் வைக்கப்பட்டுள்ளது. தற்போது விமல் எலைச்சி பான் மசாலாவில் நடித்ததற்காக நடிகர்கள் ஷாருக் கான், அஜய் தேவ்கன், டைகர் ஷெராஃப் ஆகியோருக்கு மகாராஷ்டிரா உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. அந்த நோட்டீஸில் விமல் எலைச்சி பான் மசாலா விளம்பரத்தில் நடிப்பதை உடனே நிறுத்துங்கள் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

விளக்கம் அளிக்க 15 நாள் கெடு

தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் பான் மசாலாவிற்கு மறைமுகமாக விளம்பரம் செய்ததற்காக தங்களுக்கு எதிராக ஏன் சட்ட நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பது குறித்து 15 நாட்களுக்குள் எழுத்துப்பூர்வமாக பதிலளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் இந்த மூன்று நடிகர்களும் இந்தவிதமான விளம்பர பிரச்சாரத்தில் பங்கேற்பதை உடனடியாக நிறுத்திக்கொள்ளவும், புகையிலை தொடர்பான அனைத்து விளம்பர உள்ளடக்கங்களையும் தங்களது அதிகாரப்பூர்வ சமூக ஊடகக் கணக்குகளிலிருந்து அகற்றவும் அறிவுறுத்தியுள்ளது.