சினிமா செய்திகள்

“வாரணாசி” படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்த மகேஷ் பாபு

மகேஷ் பாபு, பிரியங்கா சோப்ரா நடிக்கும் ‘வாரணாசி’ திரைப்படம் 2027ம் ஆண்டு ஏப்ரல் 7ம் தேதி வெளியாகவுள்ளது.

நடிகர் மகேஷ் பாபு ‘வாரணாசி’ திரைப்படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராஜமவுலி - மகேஷ் பாபு கூட்டணி

'பாகுபலி', 'ஆர்ஆர்ஆர்' போன்ற உலகத்தரம் வாய்ந்த திரைப்படங்களைக் கொடுத்த இயக்குநர் எஸ்.எஸ். ராஜமவுலி, அடுத்ததாக மகேஷ் பாபுவை வைத்து இயக்கி வரும் இந்த திரைப்படத்திற்கு ‘வாரணாசி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. சர்வதேசத் தரத்தில் ஆக்ஷன் அட்வென்ச்சர் பாணியில் இப்படம் உருவாகி வருக்கிறது. ஸ்ரீ துர்கா ஆர்ட்ஸ் மற்றும் ஷோயிங் பிசினஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து படத்தைத் தயாரிக்கின்றன.

அடர்ந்த காடுகளில் “வாரணாசி”

சமீபத்தில் வெளியான புகைப்படத்தில் ஆப்பிரிக்காவின் அடர்ந்த காட்டுப் பகுதியில், பின்னணியில் ஒட்டகச்சிவிங்கிகள் நிற்க, மகேஷ் பாபு மிகவும் கம்பீரமான தோற்றத்தில் காட்சியளிக்கிறார். காடுகளுக்குள் சாகசப் பயணம் மேற்கொள்ளும் ஒரு ஆராய்ச்சியாளராக அவர் இப்படத்தில் வலம் வரவுள்ளார் என்பதையும் இந்தத் தோற்றம் உறுதிப்படுத்துகிறது.

ரூ.1,400 கோடி பட்ஜெட்:

சுமார் ரூ.1,400 கோடி பிரம்மாண்ட செலவில் உருவாகும் இப்படம், இந்திய திரையுலக வரலாற்றிலேயே மிக அதிக செலவில் தயாரிக்கப்படும் திரைப்படமாகும். கி.பி. 512 முதல் தற்காலம் வரை, திரேதா யுகம் முதல் கலியுகம் வரை எனப் பல காலகட்டங்களை இணைக்கும் ஒரு அறிவியல் புனைகதை மற்றும் ஆன்மீக சாகசப் படமாக இது உருவாகிறது.

அண்டவெளியில் இருந்து பூமிக்கு வரும் விண்கல் ஆபத்தும், வாரணாசி படித்துறைகளின் ரகசியங்களும் இதன் மையக்கதை எனத் தெரிகிறது. ஐதராபாத், ஒடிசா, கென்யாவின் ஆப்பிரிக்க காடுகள் மற்றும் அண்டார்டிகாவின் உறைபனிப் பகுதிகள் என உலகம் முழுவதும் இதன் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது.

நட்சத்திரப் பட்டாளம் மற்றும் ரிலீஸ் தேதி

இத்திரைப்படத்தில் மகேஷ் பாபுவுடன் இணைந்து முன்னணி பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா மற்றும் பிரபல மலையாள நடிகர் பிரித்விராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஆஸ்கார் விருது வென்ற எம்.எம். கீரவாணி இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தை புகழ்பெற்ற ஸ்ரீ துர்கா ஆர்ட்ஸ் மற்றும் ஷோயிங் பிசினஸ் ஆகிய நிறுவனங்களின் சார்பில் தயாரிப்பாளர்கள் கே.எல். நாராயணா மற்றும் எஸ்.எஸ். கார்த்திகேயா ஆகியோர் இணைந்து பிரம்மாண்டமாகத் தயாரிக்கின்றனர்.

ஐமாக்ஸ் தொழில்நுட்பத்தில் 3D வடிவில்

முழுக்க முழுக்க ஐமாக்ஸ் தொழில்நுட்பத்தில் 3D வடிவில் உருவாகி வரும் இத்திரைப்படம், வரும் 2027 ஏப்ரல் 7 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் மிக பிரம்மாண்டமாக வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், நடிகர் மகேஷ் பாபு தனக்கான படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முழுமையான வாரணாசி படப்பிடிப்பும் இன்னும் ஒரு மாதத்தில் நிறைவடைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

SCROLL FOR NEXT