சினிமா செய்திகள்

“ஜனநாயகன்” பட வழக்கில் முக்கிய குற்றவாளி கைது

‘ஜன நாயகன்’ திரைப்படத்தை பல்வேறு இணைய தளங்கள் மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் பரப்பியதாக இதுவரை 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை,

தமிழக முதல்-அமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் நடித்துள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில், கேவிஎன் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படம், விஜய்யின் கடைசி திரைப்படம் என கூறப்படுவதால் ரசிகர்களின் கவனம் முழுவதுமாக அதன் மீது திரும்பியுள்ளது.

இணையத்தில் கசிந்த படம்

தணிக்கைச் சான்றிதழ் தொடர்பான நடைமுறைகள் காரணமாக ‘ஜன நாயகன்’ திரைப்படத்தின் வெளியீடு தாமதமாகியுள்ள நிலையில், படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் கசிந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் திரைப்படத் துறையினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சியடையச் செய்தது.

இந்த வழக்கு தொடர்பாக தமிழக இணையக் குற்றப்பிரிவு காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கசிவின் பின்னணியில் செயல்பட்ட முக்கிய நபர்களை அடையாளம் கண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த வழக்கின் முக்கிய குற்றவாளிகளாக கருதப்படும் பிரசாந்த், செல்வம் மற்றும் பாலகிருஷ்ணன் ஆகிய மூவர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்துள்ளது. அவர்களை காவல்துறையினர் சிறையில் அடைத்துள்ளனர். மேலும், திரைப்படத்தை பல்வேறு இணைய தளங்கள் மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் பரப்பியதாக மேலும் 6 பேரை இணையக் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். திரைப்பட கசிவை தடுக்கவும், அதில் தொடர்புடையவர்களை கண்டறியவும் காவல்துறையினர் தொடர்ந்து அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்

இந்நிலையில், ‘ஜன நாயகன்’ திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையத்தில் வெளியிட்ட வழக்கில் தேடப்பட்ட முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். படத்தை இணையத்தில் பரப்பியதில் மூளையாக செயல்பட்ட இவர் நீண்ட நாட்களாக தலைமறைவாக இருந்துள்ளார். இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.