சினிமா செய்திகள்

'தனுஷ் 55' படத்தின் முக்கிய அப்டேட்... பிறந்தநாளில் வெளியாகும் பர்ஸ்ட் லுக்?

தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ், தொடர்ந்து வித்தியாசமான கதைக்களங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். சமீபத்தில் இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் வெளியான ‘கர’ திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தாலும், வெளியான பிறகு கலவையான விமர்சனங்களையே பெற்றது.

இந்தப் படத்தைத் தொடர்ந்து, ‘அமரன்’ திரைப்படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். வுண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் ஆடேக்ஸ் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்து வரும் இந்தப் படத்திற்கு தற்காலிகமாக ‘தனுஷ் 55’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

நட்சத்திர பட்டாளத்துடன் உருவாகும் படம்

‘ஸ்பை ஆக்‌ஷன்’ கதைக்களத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில் நடிகைகள் ஸ்ரீலீலா மற்றும் சாய் பல்லவி முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும் மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான மம்முட்டியும் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். குறிப்பாக, சாய் பல்லவி காவல் துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

பிறந்தநாளில் வெளியாகும் பர்ஸ்ட் லுக்?

இந்த நிலையில், ‘தனுஷ் 55’ திரைப்படம் குறித்த புதிய தகவல் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, வருகிற ஜூலை 28-ஆம் தேதி நடிகர் தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் முதல் தோற்றப் போஸ்டர் மற்றும் அதிகாரப்பூர்வ தலைப்பு வெளியிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி, ரசிகர்களுக்கு சிறப்பு விருந்தாக படத்தின் சிறு முன்னோட்டக் காட்சியும் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் தனுஷ் ரசிகர்கள் அந்த அறிவிப்புக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர்.