முழுமையான சயின்ஸ் பிக்ஷன் கதையுடன் உருவாகியுள்ள திரைப்படம், ‘மகரம்’. அகஸ்டின் பிரபு இயக்கியுள்ள இப்படத்தை ராக்ஸ் நேச்சர் என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ளது. ஆதர்ஷ் சந்திர சேகரன் இசை அமைத்துள்ளார். அமல் டோமி ஒளிப்பதிவு செய்துள்ளார். அஜித், இஷிதா, அமர் ரமேஷ், நிர்மல், சாமி, அசோக் குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் டீஸர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இயக்குநர் அகஸ்டின் பிரபு கூறும்போது, “4 கதைகளை ஒன்றோடொன்று இணைத்து ஒரு சினிமாட்டிக் யூனிவர்ஸ் உருவாக்கும் கனவு எனக்கிருந்தது. பெரிய தயாரிப்பாளர்கள் செய்யாததைச் சிறிய டீமாக முயற்சி செய்ய வேண்டும் என்ற எண்ணம். ஒரு நல்ல ஐடியா வந்தால் அதை உடனே செயல்படுத்த வேண்டும் என்பதே எங்கள் நம்பிக்கை. அதிலிருந்தே ‘மகரம்’ உருவானது.ராமேஸ்வரம், தூத்துக்குடி உள்ளிட்ட கடல் பகுதிகளில் படமாக்கினோம். கிட்டத்தட்ட 70 சதவிகித காட்சிகள் கடலுக்குள் எடுக்கப்பட்டது. அது மிகப்பெரிய ரிஸ்க். இருந்தாலும் தரத்தில் சலுகை செய்யவில்லை. இது ஒரு ஹாலிவுட் பட அனுபவத்தைத் தரும்” என்றார்.
இந்தப் படத்தில் 700 விபிஎக்ஸ் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இந்தப் படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஆங்கிலம் என ஐந்து மொழிகளில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது.