திருவனந்தபுரம்,
மலையாள பிக்பாசில் சக போட்டியாளரிடம் காதலை வெளிப்படுத்திய இளம் பெண்ணை நிகழ்ச்சியில் இருந்து பாதியில் அழைத்து செல்ல பெற்றோர் வந்த நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ், இந்தியை போல கேரளாவில் மலையாள ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசன் நடைபெற்று வருகிறது.
இதில் போட்டியாளராக கலந்து கொண்ட இஸ்லாமிய மதத்தை சேர்ந்த இன்ஸ்டா பிரபலமான இளம்பெண் நேஹா பாத்திமா சக போட்டியாளரான இந்து மதத்தை சேர்ந்த சந்தோஷ் ராஜ் என்ற இளைஞரிடம் காதலை வெளிப்படுத்தினார்.
இந்நிலையில், மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரத்திற்கான புரோமோ வீடியோ நேற்று வெளியானது. அதில், நேஹா பாத்திமாவின் பெற்றோரை பிக்பாஸ் தொகுப்பாளர் மோகன்லால் அழைத்து வந்துள்ளார்.
நிகழ்ச்சியில் பேசிய நேஹா பாத்திமாவின் பெற்றோர் பிக்பாஸ் நிகழ்ச்சியை நிறுத்தி பாதியிலேயே தங்கள் மகளை அழைத்து செல்ல வந்துள்ளதாக கூறினர். பிற போட்டியாளர்கள் யுக்திகளுடன் விளையாடியபோது நீ உணர்வு ரீதியிலான முடிவுகளை எடுக்க அனுமதிக்கப்பட்டுவிட்டதாக நேஹாவின் தாயார் தெரிவித்தார்.
இந்து மதத்தை சேர்ந்த சக போட்டியாளரிடம் இஸ்லாமிய மதத்தை சேர்ந்த நேஹா பாத்திமா தனது காதலை வெளிப்படுத்தியதால் அவரது பெற்றோர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து அழைத்து செல்ல வந்த சம்பவம் மலையாள சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேஹாவை நிகழ்ச்சியில் இருந்து பாதியில் அழைத்து செல்ல வந்த அவரது பெற்றோரின் முடிவு மத ரீதியிலானதாக உள்ளதாக விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இது தொடர்பாக சமூகவலைதளத்தில் பலரும் விவாதித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.