கொச்சி,
இயக்குநர் சிதம்பரம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'மஞ்சுமெல் பாய்ஸ்'. இப்படத்தில் நடிகர்கள் சவுபின் சாகிர், ஸ்ரீநாத் பாசி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கொடைக்கானல் குணா குகையை மையப்படுத்தி கடந்த 2024-ம் ஆண்டு பிப்ரவரி 23 ம் தேதி வெளியான இப்படம் கேரளாவை விட தமிழகத்தில் பெரும் வெற்றியைப் பெற்று அதிக வசூலைக் குவித்தது. இப்படம் மலையாள சினிமா வரலாற்றில் 200 கோடி வசூல் செய்த முதல் படம் என்கிற மகத்தான சாதனையை படைத்தது.
சமீபத்தில் இயக்குனர் சிதம்பரம் மீது இளம்பெண் பாலியல் புகார் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். புகாரில், ஏலம்குளம் பகுதியில் உள்ள தனது குடியிருப்புக்குள் அனுமதியின்றி நுழைந்து, பாலியல் ரீதியாக அநாகரீகமாக நடந்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. வழக்குப்பதிவு செய்வதற்கு முன் புகார்தாரரின் வாக்குமூலத்தைப் பதிவு செய்த போலீஸார், இது தொடர்பாக விசாரணை நடத்த இயக்குநருக்கு விரைவில் நோட்டீஸ் அனுப்பப்படும் என்றும், விசாரணையின் முடிவில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தனர். பின்னர் இயக்குனர் சிதம்பரம் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதுகுறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும், விரைவில் இயக்குனர் சிதம்பரத்திடம் விசாரணை நடத்தப்படும் என்றும் எர்ணாகுளம் தெற்கு போலீசார் தெரிவித்தனர்.
இந்நிலையில், ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படத்தின் இயக்குநர் சிதம்பரத்திற்கு எர்ணாகுளம் அமர்வு நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியுள்ளது.