சினிமா செய்திகள்

‘நடிகைகளை எப்படியும் விமர்சிக்கலாம் என்று பலர் நினைத்துவிடுகிறார்கள்’ - திரிப்தி டிம்ரி

கவர்ச்சியாக நடிக்க வேண்டும் என்று யாரும் சினிமாவுக்கு வருவதில்லை என நடிகை திர்ப்தி டிம்ரி தெரிவித்துள்ளார்.

மும்பை,

'மாம்', 'போஸ்டர் பாய்ஸ்', 'லைலா மஜ்னு', 'புல்புல்' போன்ற பல பாலிவுட் திரைப்படங்களில் நடித்தவர் நடிகை திரிப்தி டிம்ரி. குறிப்பாக சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கத்தில் 2023-ம் ஆண்டு வெளியான ‘அனிமல்’ திரைப்படத்தில் நடித்ததன் மூலம் இந்திய அளவில் திரிப்தி டிம்ரி பிரபலமானார்.

தீபிகாவுக்கு பதிலாக...

தற்போது சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கும் 'ஸ்பிரிட்' படத்தில் பிரபாஸ் ஜோடியாக நடித்து வருகிறார். இந்த படம் அடுத்த அண்டு திரைக்கு வர உள்ளது. இந்த படத்தில் முன்னதாக தீபிகா படுகோன் நடித்து வந்த நிலையில், சில காரணங்களுக்காக அவர் நீக்கப்பட்டார். அதனைத்தொடர்ந்து திரிப்தி டிம்ரி ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

சினிமாவில் கவர்ச்சி

இதற்கிடையில் நடிகைகள் கவர்ச்சியாக நடிப்பது பற்றி திரிப்தி டிம்ரி மனம் திறந்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “சினிமாவில் விரைவில் 10 ஆண்டுகளை நிறைவு செய்ய உள்ளேன். இந்த பத்தாண்டு பயணத்தில் 'அனிமல்' திரைப்படம் எனக்கான மிகப்பெரிய அடையாளத்தை தந்தது. ‘ஸ்பிரிட்’ படம் என்னை ரசிகர்கள் மனதில் நிலைநிறுத்தச் செய்யும் என்று உறுதியாக நம்புகிறேன்.

'அனிமல்' படத்தில் நான் நடித்தபோதே என் நடிப்புக்கான பாராட்டுகள் கிடைத்தன. அதேவேளை, ‘கவர்ச்சியாக நடிக்கலாமா? இவ்வளவு கவர்ச்சி தேவையா?’ என்றெல்லாம் விமர்சித்தார்கள். எனக்கு மட்டுமல்ல, கவர்ச்சியாக நடிக்கும் அத்தனை நடிகைகளையும் விமர்சிக்கத்தான் செய்கிறார்கள். நடிகைகள் என்றாலே அவர்களை எப்படியும் விமர்சிக்கலாம் என்று பலரும் நினைத்து விடுகிறார்கள்.

வித்தியாசம் தெரியும்...

இங்கு பாரம்பரியம், கலாசாரத்தை மீறும் போக்கு யாருக்குமில்லை. இன்னும் சொல்லப்போனால் கவர்ச்சியாக நடிக்க வேண்டும் என்று யாரும் சினிமாவுக்கு வருவதில்லை. கதையின் போக்கு, ரசிகர்களின் விருப்பம், தொழில்நுட்ப வளர்ச்சி இதெல்லாமே மாறி வருகிறது. எனவே கதைக்காக எதையும் செய்யும் நிலைக்கு நடிகைகளும் வந்துவிடுகிறார்கள்.

ஆனால் ஒன்றை மட்டும் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். நடிகைகளுக்கு கவர்ச்சிக்கும், ஆபாசத்துக்கும் வித்தியாசம் நன்றாகவே தெரியும். எனவே எல்லை மீறாமல்தான் இங்கு பயணிக்கிறோம்.

இதெல்லாம் பலருக்கும் தெரிவதில்லை. சினிமாவில் முத்தக்காட்சிகளை கூட மிகவும் பாதுகாப்பாகவே படமாக்குகிறார்கள். எனவே நடிகைகளை குறைசொல்வதை கொஞ்சம் நிறுத்திக் கொள்ளலாம்" என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT