சென்னை,
செல்வராகவன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்து வரும் 'மெண்டல் மனதில்' திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
'துள்ளுவதோ இளமை' திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் செல்வராகவன். தொடர்ந்து 'காதல் கொண்டேன்', 'புதுப்பேட்டை', 'ஆயிரத்தில் ஒருவன்', 'மயக்கம் என்ன' உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இவரது இயக்கத்தில் தனுஷ் நடித்த 'நானே வருவேன்' திரைப்படம் கடந்த 2022-ம் ஆண்டு வெளியானது. இயக்குநராக மட்டுமின்றி நடிகராகவும் செல்வராகவன் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். 'பீஸ்ட்', 'மார்க் ஆண்டனி', 'ராயன்', 'சொர்க்கவாசல்' உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி, பின்னர் கதாநாயகனாகவும் வளர்ந்தவர் ஜி.வி.பிரகாஷ். 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ள இவர், தனது இசைக்காக இரண்டு முறை தேசிய விருது பெற்றுள்ளார். நடிகராகவும் தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார்.
இந்த நிலையில், செல்வராகவன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'மெண்டல் மனதில்'. ஏற்கனவே 'ஆயிரத்தில் ஒருவன்', 'மயக்கம் என்ன' ஆகிய படங்களில் இருவரும் இணைந்து பணியாற்றியுள்ளனர். அந்த வகையில், இவர்கள் மூன்றாவது முறையாக இணைந்துள்ள திரைப்படம் இதுவாகும். அதேசமயம், செல்வராகவனின் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடிக்கும் முதல் படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இப்படத்தில் நடிகை மாதுரி ஜெயின் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், நடிகை சீதா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் முதல் பாடலான 'உயிரே உயிரே' சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தைப் பெற்றது.
இந்த நிலையில், 'மெண்டல் மனதில்' திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக ஜி.வி.பிரகாஷ் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார். இதனுடன் இயக்குநர் செல்வராகவனுடன் உரையாடுவது போன்ற புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார். இந்தப் பதிவு தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.