உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட ‘ஸ்பைடர்மேன்’ திரைப்பட வரிசையின் அடுத்த பாகமான ‘ஸ்பைடர்மேன் - பிராண்ட் நியூ டே’ திரைப்படம் வெளியாக தயாராகியுள்ளது. கடைசியாக 2021-ஆம் ஆண்டு வெளியான ‘ஸ்பைடர்மேன் - நோ வே ஹோம்’ திரைப்படத்திற்கு பிறகு, ஐந்து ஆண்டுகள் இடைவெளியில் இந்தப் படம் உருவாகியுள்ளது.
டெஸ்டின் டேனியல் கிரெட்டன் இயக்கியுள்ள இந்தப் படத்தில், டாம் ஹாலண்ட் மீண்டும் ஸ்பைடர்மேன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் ஜெண்டயா, ஜேக்கப் படலான், சேடி சிங், ஜான் பெர்ன்தால், மார்க் ரப்பலோ, மைக்கேல் மாண்டோ மற்றும் டிராமெல் டில்மேன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்தத் திரைப்படம் வருகிற ஜூலை 31-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தியாவில் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் படம் திரையிடப்பட உள்ளது.
‘ஸ்பைடர்மேன் - பிராண்ட் நியூ டே’ திரைப்படத்திற்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளதாக சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட் இந்தியா அறிவித்துள்ளது. 2டி, 3டி, 4டி.எக்ஸ்., டால்பி சினிமா 3டி, பி.எக்ஸ்.எல்., பிக் பிக்ஸ், ஸ்கிரீன் எக்ஸ், ஐஸ் மற்றும் எம்.எக்ஸ்.4டி உள்ளிட்ட பல்வேறு பிரீமியம் திரை வடிவங்களிலும் படம் வெளியாக உள்ளது. அண்மையில் வெளியான படத்தின் இரண்டாவது டிரெய்லரும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்து வருகிறது.
இந்த நிலையில், ‘ஸ்பைடர்மேன்’ படத்தின் புரோமோ வீடியோ ஒன்றையும் சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட் வெளியிட்டுள்ளது. 39 வினாடிகள் கொண்ட இந்த புரோமோ வீடியோவில் கால்பந்து வீரர் மெஸ்ஸி நடித்திருப்பது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
39 வினாடிகள் கொண்ட புரோமோ வீடியோவில் வெறும் 5 வார்த்தைகள் மட்டுமே பேசியுள்ள மெஸ்ஸிக்கு சம்பளமாக 15 மில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ. 143 கோடி) வழங்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் பேசப்பட்டு வருகிறது. இருப்பினும், மெஸ்ஸிக்கு ரூ. 143 கோடி சம்பளம் வழங்கப்பட்டதாக படத் தயாரிப்பு நிறுவனமோ மெஸ்ஸியின் தரப்பிலோ உறுதிப்படுத்தப்பட்ட எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை.