சினிமா செய்திகள்

அமைச்சர் ராஜ்மோகன் நியமனம் சரியே: விஷாலுக்கு, கவிஞர் ரவிபாரதி கண்டனம்

முதல்-அமைச்சர் விஜய்யின் நியமனத்தில் குறுக்கிட யாருக்கும் உரிமையில்லை என கவிஞர் ரவிபாரதி தெரிவித்துள்ளார்.

சென்னை,

முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் ராஜ்மோகனுக்கு திரைப்பட இலாகா ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு தென்னிந்திய நடிகர் சங்கச் பொதுச்செயலாளர் விஷால் அதிருப்தி தெரிவித்தார். நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் சினிமா துறையை அனுபவமே இல்லாத ஒருவரிடம் ஒப்படைத்திருக்க கூடாது என்றும் தெரிவித்திருந்தார். விஷாலின் இந்த கருத்துக்கு நடிகர் அருண் விஜய் உள்ளிட்டோரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இதற்கிடையில் விஷாலின் கருத்துக்கு கவிஞர் ரவிபாரதி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

முதல்-அமைச்சர் விஜய்யின் நியமனத்தில் குறுக்கிட யாருக்கும் உரிமையில்லை. விஷாலின் விமர்சனம் துரதிருஷ்டவசமானது. அனுபவித்து அறிந்துகொள்வதே உண்மையான அறிவு. அதன் அடிப்படையில் படிப்படியாக எல்லாவற்றையும் அறிந்துகொண்டு திரைப்பட துறையை மட்டுமல்ல, தமிழ் வளர்ச்சி, செய்தித்துறைகளையும் ராஜ்மோகன் நிச்சயம் மேம்படுத்தி காட்டுவார். 'புதியவர்களை கம்மியாக எடை போட வேண்டாம்' என்று கமல்ஹாசன் குறிப்பிட்டதையே விஷாலுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.