சினிமா செய்திகள்

கரு.பழனியப்பன் இயக்கும் புதிய படத்தின் டைட்டிலை வெளியிட்ட மு.க.ஸ்டாலின்

கரு.பழனியப்பன் இயக்கத்தில் காளி வெங்கட் நடிக்கும் புதிய படத்திற்கு ‘குக்கர்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2003ம் ஆண்டில் வெளியான ‘பார்த்திபன் கனவு’ படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் கரு.பழனியப்பன். இந்த படத்தில் ஸ்ரீகாந்த் சினேகா நடித்திருந்தனர். முதல் படத்திலேயே இயக்குனர் கரு பழனியப்பனுக்கு தமிழக அரசின் சிறந்த அறிமுக இயக்குனர் விருது கிடைத்தது. விஷால் நடித்த ‘சிவப்பதிகாரம்’ சேரன்- சினேகா நடித்த ‘பிரிவோம் சந்திப்போம்’ படங்களை இயக்கினார். ‘மந்திரப்புன்னகை’ ‘சதுரங்கம்’ ‘ஜன்னல் ஓரம்’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

‘ஹவுஸ்புல்’, ‘நட்பே துணை’, ‘டி பிளாக்’, ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ உள்ளிட்ட படங்களில் கரு.பழனியப்பன் நடித்திருக்கிறார். தனியார் தொலைகாட்சி ஒன்றில் அவர் விவாத மேடை நிகழ்ச்சியில் நடுவராகவும் சில ஆண்டுகள் இருந்தார். இவரது தந்தையின் மூத்த சகோதரர்தான் மூத்த அரசியல்வாதியான பழ.கருப்பையா.

நடிகர் காளி வெங்கட், கதையின் நாயகனாக நடிக்கும் ஒரு படத்தை கரு பழனியப்பன் இயக்கி வருகிறார். தேனியில் முதல் கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது.

இந்நிலையில், கரு. பழனியப்பன் இயக்கும் புதிய திரைப்படத்தின் டைட்டிலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார். படத்திற்கு “குக்கர்” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வின் போது, நடிகர் காளி வெங்கட் மற்றும் ஒளிப்பதிவாளர் திரு. ராஜசேகரன் ஆகியோர் உடனிருந்தனர்.