சினிமா செய்திகள்

புர்ஜ் கலீபாவில் மனைவி பெயரில் வீடு வாங்கிய மோகன்லால்- விலை எவ்வளவு தெரியுமா?

துபாயில் உள்ள புர்ஜ் கலீபா கட்டிடத்தின் 29-வது மாடியில் உள்ள அபார்ட்மெண்ட்டை மோகன்லால் தனது மனைவி பெயரில் வாங்கியுள்ளார்.

புர்ஜ் கலீபாவில் வீடு வாங்கிய மோகன்லால்

மலையாள திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான மோகன்லால், தனது நடிப்புத் திறமையால் இந்திய அளவில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். மலையாளம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ரசிகர்களிடையேயும் பிரபலமான அவர், ஒரு படத்துக்கு ரூ.20 கோடி முதல் ரூ.25 கோடி வரை சம்பளம் பெறுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலீபா-வில் அவர் புதிய வீடு வாங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரூ.5 கோடி மதிப்பிலான அபார்ட்மெண்ட்

துபாயில் உள்ள புர்ஜ் கலீபா கட்டிடத்தின் 29-வது மாடியில் அமைந்துள்ள ஒரு படுக்கையறை கொண்ட அபார்ட்மெண்ட்டை மோகன்லால் தனது மனைவி சுசித்ராவின் பெயரில் வாங்கியுள்ளார். இந்த வீட்டின் மதிப்பு இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ.5 கோடி என கூறப்படுகிறது. சிறிய ஸ்டூடியோ வகை வீடாக இருந்தாலும், அதன் இருப்பிடம் மற்றும் வசதிகள் காரணமாக உயர்ந்த விலையை கொண்டதாக கருதப்படுகிறது. துபாயின் நகர அழகை ரசிக்கும் வகையில் அமைந்துள்ள இந்த வீடு, மோகன்லாலின் விருப்பமான சொத்துகளில் ஒன்றாக மாறியுள்ளது.

ஏற்கனவே துபாயில் சொகுசு பங்களா

மோகன்லாலுக்கு துபாயில் இது முதல் சொத்து அல்ல. ஏற்கனவே கடற்கரை பகுதியில் சொகுசு பங்களா ஒன்றை அவர் வைத்திருப்பதாக கூறப்படுகிறது. படப்பிடிப்பு மற்றும் வேலைப்பளுவில் இருந்து விலகி அமைதியாக ஓய்வெடுப்பதற்காக அந்த வீட்டை பயன்படுத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதே புர்ஜ் கலீபாவில் பாலிவுட் நட்சத்திரமான ஷாருக்கான்-க்கும் சொத்து இருப்பதாக கூறப்படுகிறது. துபாயின் முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் வெளியிட்ட தகவலின்படி, புர்ஜ் கலீபாவில் ஒரு படுக்கையறை கொண்ட அபார்ட்மெண்ட்களின் விலை இந்திய மதிப்பில் ரூ.5 கோடி முதல் ரூ.9 கோடி வரை உள்ளது. இதனால் மோகன்லாலின் இந்த புதிய சொத்து முதலீடு திரையுலகில் பேசுபொருளாகியுள்ளது.