சினிமாவில் 42 ஆண்டுகளாக இயக்குநராக இருக்கும் மலையாள இயக்குநர் பிரியதர்ஷன் தமிழில், கோபுர வாசலிலே, சினேகிதியே, லேசா லேசா, காஞ்சிவரம், நிமிர், அப்பத்தா ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இந்தியிலும் பல படங்களை இயக்கியுள்ள இவர் இப்போது, அக் ஷய் குமார் நடிப்பில் ‘பூத் பங்களா’ எனும் காமெடி படத்தை இயக்கி இருக்கிறார். அக்ஷய்குமார், சைப் அலிகான் நடிப்பில் ‘ஹைவான்’ என்ற படத்தையும் இயக்கியுள்ளார். இது அவருக்கு 97-வது படம். அவரது 98- வது படத்தில் பங்கஜ் திரிபாதி, அன்னு கபூர், சவுரப் சுக்லா நடிக்க இருக்கின்றனர்.
1984-ல் ‘பூச்சாக்கொரு மூக்குத்தி’ திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் தற்போது வரை 99 திரைப்படங்களை இயக்கியுள்ளார்.இவர் இயக்கிய முதல் திரைப்படத்தின் நாயகனாக மோகன்லால் நடித்திருந்தார். தொடர்ந்து, மோகன்லாலை வைத்து மின்னரம், தென்மாவின் கொம்பத், காலாபாணி, ஒப்பம் போன்ற பல ஹிட் படங்களைக் கொடுத்தார்.
தமிழில் நடிகர் பிரகாஷ் ராஜை வைத்து இவர் இயக்கிய ‘காஞ்சிவரம்’ திரைப்படத்திற்காக சிறந்த படம், சிறந்த தயாரிப்பாளர் பிரிவில் தேசிய விருது பெற்றார். இந்திய சினிமாவிற்கு அதிகமான பங்களிப்பைச் செய்த இயக்குநர்களில் ஒருவரான பிரியதர்ஷனுக்கு மத்திய அரசு பத்ம ஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது.
அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், தனது முதல் படத்தில் நடித்த மோகன்லால் தன்னுடைய 100 -வது படத்திலும் கதாநாயகனாக நடிப்பார் என்று தெரிவித்திருந்தார். நாங்கள் மீண்டும் இணையும் படம் இசையை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும் என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், தற்போது பிரியதர்ஷன் தன் 100-வது திரைப்படத்தை இயக்கவுள்ளார். ஆசிர்வாத் சினிமாஸ் தயாரிக்கும் இப்படத்தில் நாயகனாக மோகன்லால் நடிக்கிறார். தன் முதல் படத்தின் நாயகனையே தன் 100-வது திரைப்படத்திலும் இயக்கவுள்ள இயக்குநர் என்கிற புதிய உலக சாதனையையும் இதன் மூலம் பிரியதர்ஷன் நிகழ்த்தவுள்ளது அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.