ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் கடந்த 2013-ம் ஆண்டு வெளியான படம் 'திரிஷ்யம்'. ரூ.5 கோடி செலவில் தயாரான இந்த படம் ரூ.75 கோடி வசூலித்து சாதனை நிகழ்த்தியது. இந்த படம் கமல்ஹாசன், கவுதமி நடிக்க 'பாபநாசம்' என்ற பெயரில் தமிழிலும் ரீமேக் செய்யப்பட்டது. தெலுங்கு, கன்னடம், இந்தி, சீன மொழிகளிலும் வெளியானது.
அதனை தொடர்ந்து 2021-ம் ஆண்டு 'திரிஷ்யம் 2' வெளியானது. நேரடியாக ஓடிடியில் வெளியான திரிஷ்யம் 2 முதல் பாகத்தை போல மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தற்போது 'திரிஷ்யம்' 3-ம் பாகம் மலையாளம், இந்தி மொழிகளில் உருவாகியுள்ளது. இந்தி படத்தில் விஜய் சல்கோன்கராக அஜய் தேவ்கன், தபு, ஷ்ரியா சரண், இஷிதா தத்தா, ரஜத் கபூர் மற்றும் அக்சய் கண்ணா ஆகியோர் நடித்துள்ளனர். மலையாளத்தில் மோகன்லால் மற்றும் மீனா நடித்துள்ளனர்.
ஆசீர்வாத் சினிமாஸ் சார்பில் ஆண்டனி பெரும்பாவூர் தயாரித்துள்ள இந்த படம் வருகிற மே 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் டீசர் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 'திரிஷ்யம் 3' படத்தின் டீசர் நாளை மறுநாள் (ஏப்ரல் 29) மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை போஸ்டர் ஒன்றை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.