சினிமா செய்திகள்

அஜித்தின் ‘டேர் டெவில்’ படத்தில் இருந்து மோகன்லால் விலகல்?

‘டேர் டெவில்’ படத்தின் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் மாத இறுதியில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை,

அஜித்தின் மனைவியும் நடிகையுமான ஷாலினி அஜித்குமார் தயாரிக்க உள்ள ‘டேர் டெவில்’ படத்திலிருந்து மலையாள நடிகர் மோகன்லால் விலகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மீண்டும் இணையும் அஜித் - ஆதிக் ரவிச்சந்திரன்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித்குமார் நடிப்பில் கடந்த ஆண்டு ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் வெளியானது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து அஜித்குமார் மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தனது 64-வது படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்திற்கு ‘டேர் டெவில்’ என பெயரிடப்பட்டுள்ளது.

ஷாலினி தயாரிப்பு - அனிருத் இசை

அஜித்தின் மனைவியும் நடிகையுமான ஷாலினி அஜித்குமார், ‘பிரேவ் ஹார்ட்ஸ் புரொடக்ஷன்ஸ்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் இப்படத்தை தயாரிக்கிறார். படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளதாக கூறப்படுகிறது.

செப்டம்பரில் தொடங்கும் படப்பிடிப்பு

‘டேர் டெவில்’ படத்தின் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் மாத இறுதியில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. மேலும், இப்படத்தில் பிரபல மலையாள நடிகர் மோகன்லால் மற்றும் தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகின.

மோகன்லால் விலகியதாக தகவல்

இந்த நிலையில், ‘டேர் டெவில்’ படத்தில் இருந்து மோகன்லால் விலகியுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. அவரது சம்பளம் தொடர்பாக ஏற்பட்ட கருத்து வேறுபாடே இதற்கு காரணமாக இருக்கலாம் என சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

இருப்பினும், மோகன்லால் விலகியது குறித்தோ, அதற்கான காரணம் சம்பள விவகாரம்தான் என்பது குறித்தோ அஜித், மோகன்லால், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் அல்லது படக்குழு தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. மோகன்லாலுக்கு பதிலாக இப்படத்தில் வேறு முன்னணி நடிகர் இணைவாரா என்ற எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.