சினிமா செய்திகள்

பிரீத்தி ஜிந்தாவின் டீப்பேக் வீடியோக்கள்... உடனே நீக்க உத்தரவிட்ட மும்பை ஐகோர்ட்டு

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி போலி வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் பரப்பப்பட்டு வருகின்றன.

மும்பை,

நடிகை பிரீத்தி ஜிந்தா மனு

இந்தி திரையுலகின் பிரபல முன்னணி திரைப்பட நடிகை பிரீத்தி ஜிந்தா, மும்பை ஐகோர்ட்டில் மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார். அதில், செயற்கை நுண்ணறிவு (டீப்பேக்) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தனது முகம் மற்றும் குரலை தவறாக மாற்றி, சுமார் 275 இணையதளங்களில் போலி வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் பரப்பப்பட்டு வருகிறது. இது தனது நற்பெயருக்கும், கண்ணியத்திற்கும் களங்கம் விளைவிப்பதாக அவர் முறையிட்டிருந்தார்.

இந்த மனு நேற்று மும்பை ஐகோர்ட்டு நீதிபதி மாதவ் ஜாம்தார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, நடிகை பிரீத்தி ஜிந்தாவுக்கு ஆதரவாக இடைக்கால உத்தரவு பிறப்பித்தார். நீதிபதி தனது உத்தரவில் கூறி இருப்பதாவது:-

வீடியோக்களை நீக்கவேண்டும்

திரைத்துறையில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் நடிகை பிரீத்தி ஜிந்தா, தனது கடின உழைப்பால் பொதுமக்களிடம் நல்லதொரு அங்கீகாரத்தை பெற்றுள்ளார். அவரது அனுமதி இல்லாமல், நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இப்படி போலி வீடியோக்களை உருவாக்குவது ஒரு தனிமனிதனின் நற்பெயரை கெடுக்கும் செயலாகும். இது அரசியல் சாசன சட்டம் வழங்கியுள்ள கண்ணியத்துடன் வாழும் அடிப்படை உரிமைக்கு எதிரானது.

எனவே, இணையதளங்களில் உள்ள நடிகை பிரீத்தி ஜிந்தாவின் போலி வீடியோக்கள், மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்கள் அனைத்தையும் சமூகவலைத்தளங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் உடனடியாக நீக்கவேண்டும்.

இணையதள இடைத்தரகர்களாக செயல்படும் சமூகவலைத்தள நிறுவனங்கள் இதுபோன்ற போலி பதிவுகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க தொடங்கினால் மட்டுமே, குற்றவாளிகள் தப்புவது தடுக்கப்படும். அவ்வாறு நடவடிக்கை எடுக்க தவறினால், பொதுமக்களின் அடிப்படை உரிமைகளை பாதிக்கும் செயலுக்கு நீங்களும் ஒரு பங்காளியாகி விடுவீர்கள்.

இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறினார்.