பாலிவுட் நடிகர் இம்ரான் கான் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்ற உத்தரவுக்கு மும்பை ஐகோர்ட் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் ராஜினாமாவை வலியுறுத்தி டெல்லியில் நடந்த போராட்டத்திற்கு ஆதரவாக மும்பையில் நடந்த போராட்டத்தில் இந்தி நடிகர் அமீர்கானின் உறவினரும், நடிகருமான இம்ரான்கான்(வயது43) பங்கேற்றார்.
இம்ரான் கான் வெளிநாட்டு குடியுரிமை பெற்றவர் என்பதால் சட்டங்களை மீறியதாகக் கூறி வருகிற 28-ந் தேதிக்குள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்று மும்பை போலீசார் உத்தரவிட்டனர். இதை எதிர்த்து மும்பை ஐகோர்ட்டில் நடிகர் இம்ரான்கான் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், போராட்டத்தை தான் ஒருங்கிணைக்கவில்லை என்றும் போராட்டத்தில் நேரடியாகப் பங்கேற்காமல் அங்கு என்ன நடக்கிறது என்பதைக் காண மட்டுமே சென்றதாகவும் அவர் கூறினார். தனது தரப்பின் நியாயத்தைக் கேட்காமல் உடனடியாக நாடுகடத்த உத்தரவிட்டது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்றும் அவரது வாதத்தில் குறிப்பிடப்பட்டது.
இந்த மனு நேற்று தலைமை நீதிபதி மகேஷ் சந்திர திரிபாதி மற்றும் நீதிபதி அத்வைத் சேத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இம்ரான்கான் தரப்பில் ஆஜரான வக்கீல் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு கோரினர். இதனை ஏற்று கொண்ட நீதிபதிகள், மனு மீதான விசாரணையை இன்றைக்கு ஒத்திவைத்தனர்.
மும்பை ஐகோர்ட்டில் இந்த வழக்கு விசாரணையில், மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்குரைஞர்கள், அடுத்த விசாரணை நடைபெறும் நவம்பர் 2ம் தேதி வரை இம்ரான் கான் மீது கட்டாய நடவடிக்கை அல்லது நாட்டை விட்டு வெளியேற்றும் நடவடிக்கை எடுக்கப்படாது என உறுதியளித்தனர்.
இதனை ஏற்றுக்கொண்ட மும்பை ஐகோர்ட், அக்டோபர் 28-க்குள் இம்ரான் கான் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்ற உத்தரவை நவம்பர் 2 2ம் தேதி வரை நிறுத்திவைத்து இடைக்காலத் தடை விதித்துள்ளது.