சினிமா செய்திகள்

திரையரங்கில் ரசிகர்களுடன் “ஜெயிலர் 2” பார்த்த இசையமைப்பாளர் அனிருத் உருக்கம்

ரஜினி நடிப்பில், நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவான ‘ஜெயிலர் 2’ படம் இன்று உலகளவில் வெளியாகி உள்ளது.

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள ‘ஜெயிலர் 2’ படத்தை அதன் இசையமைப்பாளர் அனிருத் வெற்றி திரையரங்கில் பார்த்து ரசித்தார்.

ரஜினி - நெல்சன் - அனிருத் கூட்டணியில் ‘ஜெயிலர் 2’

‘ஜெயிலர்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமான ‘ஜெயிலர் 2’ இன்று உலகளவில் வெளியானது. மீண்டும் ரஜினிகாந்த் - நெல்சன் - அனிருத் கூட்டணி இணைந்துள்ளதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்தது.

இப்படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார் சிறப்புத் தோற்றங்களில் நடித்துள்ளனர். மேலும், ரம்யா கிருஷ்ணன், மிதுன் சக்கரவர்த்தி, சந்தானம், சுராஜ் வெஞ்சரமூடு, யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். சுமார் ரூ.350 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. கர்நாடகா, ஐதராபாத், கேரளா உள்ளிட்ட இடங்களில் அதிகாலையிலேயே சிறப்புக் காட்சிகள் திரையிடப்பட்டன.

‘ஜெயிலர் 2’ இன்று உலகம் முழுவதும் பல்வேறு திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியானதை முன்னிட்டு, குரோம்பேட்டை வெற்றி திரையரங்கில் அதிகாலை முதலே ரஜினி ரசிகர்கள் திரண்டனர். திரையரங்க வளாகத்தில் பட்டாசு வெடித்தும், மேளதாளங்களுடன் நடனமாடியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும், ரஜினிகாந்தின் பிரம்மாண்ட கட்-அவுட் அமைத்து, அதற்கு பாலாபிஷேகம் செய்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

ரசிகர்களுடன் படம் பார்த்த அனிருத்

இதனிடையே, ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் இசையமைப்பாளர் அனிருத், இன்று காலை முதல் காட்சியைப் பார்ப்பதற்காகக் சென்னை குரோம்பேட்டை வெற்றி திரையரங்குக்கு வருகை தந்தார். அப்போது திரையரங்கிற்கு வெளியில் அனிருத்தை காண கூட்டம் கூடியதால் சற்று போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பின்னர் திரையரங்கிற்கு சென்ற அவர் ரசிகர்களுடன் முதல் காட்சியை பார்த்து ரசித்தார்.

வெற்றி கூட்டணி

ரஜினிகாந்தின் ‘பேட்ட’ திரைப்படம் முதல் அனிருத் இசையமைக்க தொடங்கினார். அந்த படத்தின் அனைத்து பாடல்களும் பெரும் வெற்றி பெற்ற நிலையில், அடுத்ததாக வந்த தர்பார், ஜெயிலர், மற்றும் கடைசியாக வெளியான கூலி வரை அனிருத் இசையமைத்து வருகிறார். ரஜினிகாந்த் - அனிருத் கூட்டணி, ரஜினி - ஏ.ஆர். ரகுமானுக்கு பிறகு வெற்றி கூட்டணியாக பார்க்கப்படுகிறது.

குறிப்பாக ‘ஜெயிலர்’ படத்தில் அவர் இசையமைத்த ஹூகும் பாடலை இன்றளவும் ரஜினி ரசிகர்களின் செல்போன் ரிங்டோனாக இருந்து வருகிறது. ‘ஜெயிலர்’ படத்தின் ‘அல்ல பொலேலோ’, ‘ஒன் நேம்’ உள்ளிட்ட பல பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

SCROLL FOR NEXT