இசையமைப்பாளர் தேவா ‘மீசைய முறுக்கு 2’ படத்தைப் பார்த்துவிட்டு ஹிப்ஹாப் ஆதியை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.
தனியிசை துறையில் ராப் பாடகராக அறிமுகமானவர் ஹிப்ஹாப் தமிழா ஆதி. ‘ஆம்பள’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஹிப்ஹாப் தமிழா ஆதி. பின்னர் இசையமைப்பாளர், நடிகர், இயக்குநர் என தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார்.
ஹிப் ஹாப் ஆதி இசையமைத்து இயக்கி நடித்துள்ள படம் ‘மீசைய முறுக்கு 2’ படம் வெளியாகி நான்கு நாட்களில் உலகளவில் ரூ.51 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
தமிழகம் மட்டுமின்றி, வெளிநாடுகளிலும் ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படத்திற்கு வரவேற்பு கிடைத்துள்ளதாக படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வரும் நாட்களில் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2017ம் ஆண்டு வெளியான ‘மீசைய முறுக்கு’ திரைப்படம் இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்த நிலையில், அதன் தொடர்ச்சியாக உருவாகியுள்ள ‘மீசைய முறுக்கு 2’ மீண்டும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இத்திரைப்படத்தில் தமிழ் சினிமாவின் கானா இசையை பெருமைப்படுத்தும் விதமாகவும், கானா பாடல்களுக்கு மிகப்பெரிய அங்கீகாரம் அளித்த ‘தேனிசை தென்றல்’ தேவாவை கவுரவிக்கும் வகையிலும் நடிகர் கருணாஸ் மூலமாக முக்கிய வசனங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இத்திரைப்படத்தை பார்த்த இசையமைப்பாளர் தேவா, படத்தின் சுவாரசியமான திரைக்கதையையும் கானா கலைக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவத்தையும் கண்டு பெரிதும் நெகிழ்ந்தார்.
இந்த நிலையில், இசையமைப்பாளர் தேவா ‘மீசைய முறுக்கு 2’ படத்தைப் பார்த்துவிட்டு ஆதியை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். படத்தில் கானா கலைக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவத்தை நெகிழ்ந்து பாராட்டியுள்ளார்.
இதன் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த ஆதி, “இது போதும் எனக்கு... இது போதுமே... கரையிலிருந்து கானாவை திரைக்கு எடுத்து சென்ற ஹீரோ ‘மீசைய முறுக்கு 2’ படத்தை பார்த்து பாராட்டியதுதான் இந்தப் படத்திற்கு கிடைக்ககூடிய மிகப்பெரும் அங்கீகாரம்” எனக் குறிப்பிட்டு தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.