கார்த்தியின் 30-வது படத்தின் இசை அமைப்பாளராக ‘தேவி ஸ்ரீ பிரசாத்’ இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது.
கோலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் கார்த்தி. கார்த்தியின் ‘சர்தார் 2’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ‘சர்தார் 2’ படம் செப்டம்பர் 10ம் தேதி வெளியாகவுள்ளது. இதன் டீசர் காட்சிகள் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ‘டாணாக்காரன்’ பட இயக்குனர் தமிழ் இயக்கத்தில் ‘மார்ஷல்’ திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இது பெரிய பட்ஜெட்டில் பீரியட் திரைப்படமாக உருவாகி வருகிறது. இது கார்த்தியின் 29-வது படமாகும்.
வசூல் சாதனை படைத்த பல வெற்றிப்படங்களின் பின்னணியில் உள்ள இளம் மற்றும் திறமை வாய்ந்த இயக்குநர் கல்யாண் சங்கர் இப்படத்தை இயக்குகிறார். கார்த்திக்கு ஜோடியாக முன்னணி நடிகை மீனாட்சி சவுத்ரி கதாநாயகியாக நடிக்கிறார். 'வாத்தி, "லக்கி பாஸ்கர்' போன்ற பிளாக்பஸ்டர் வெற்றிப் படங்களைத் தந்த சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் பிரம்மாண்ட வரவு செலவுத் திட்டத்தில் இப்படத்தைத் தயாரிக்கிறது.
ஏற்கனவே கார்த்தியின் பிறந்தநாளின் போது படப்பிடிப்பு குறித்த அப்டேட்டைத் தந்த தயாரிப்பு நிறுவனம், தற்போது இப்படத்தின் முக்கியக் காட்சிகள் மிக அதிவேகமாகப் படமாக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளது. கார்த்தியை இதுவரை ரசிகர்கள் பார்த்திராத முற்றிலும் மாறுபட்ட, எனர்ஜெட்டிக்கான புதிய கோணத்தில் திரையில் காட்ட இயக்குநர் திட்டமிட்டுள்ளார்.
முன்னதாக கார்த்தி-தேவி ஸ்ரீ பிரசாத் கூட்டணியில் வெளியான படங்களின் பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய ஹிட்டாக அமைந்த நிலையில், மீண்டும் இக்கூட்டணி இணைந்துள்ளதால் இப்படத்தின் ஆல்பம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் கணிசமாக அதிகரித்துள்ளது. இப்படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மிக விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தெலுங்கின் முன்னணி இசையமைப்பாளரான தேவி ஸ்ரீ பிரசாத் புஷ்பா படத்தின் மூலம் பெரிய கவனத்தையும் பெற்றார்.
தேவி ஸ்ரீ பிரசாத்தின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த அறிவிப்பை வெளியிட்ட படத்தின் தயாரிப்பு நிறுவனமான சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ், சமூக வலைத்தளங்களில் சிறப்புப் பதிவொன்றைப் பகிர்ந்து வரவேற்பு அளித்துள்ளது. “ராக்ஸ்டார் நம்மோடு இணைகிறார்! வருக வருக டிஎஸ்பி. எங்கள் இசையமைப்பாளருக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள். இணைந்து புதிய சாதனை படைக்கக் காத்திருக்கிறோம்” என பதிவிட்டுள்ளனர்.