சென்னை,
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ், வித்தியாசமான கதைக்களங்களைத் தேர்வு செய்து தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். சமீபத்தில் இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் வெளியான 'கர' திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தாலும், வெளியான பிறகு கலவையான விமர்சனங்களை பெற்றது.
'கர' படத்தைத் தொடர்ந்து, 'அமரன்' திரைப்படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் புதிய படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். வுண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் ஆடேக்ஸ் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்து வரும் இந்தப் படம், இதுவரை 'தனுஷ் 55' என்ற தற்காலிக பெயரில் அழைக்கப்பட்டு வந்தது.
ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில் ஸ்ரீலீலா, சாய் பல்லவி ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். மேலும், மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் மம்முட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். குறிப்பாக, சாய் பல்லவி காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
நேற்று முன்தினம் இப்படத்தின் டைட்டிலை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, 'தனுஷ் 55' திரைப்படத்திற்கு 'ஓம்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இப்படத்தின் தீம் மியூசிக்கை இசையமைப்பாளர் சாய் அபயங்கர் வெளியிட்டுள்ளார். இந்த தீம் மியூசிக் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை பெற்று வருகிறது.