தமிழ் சினிமாவில் ‘திக்கற்ற பார்வதி, ராஜபார்வை, அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன், மகளிர் மட்டும், சின்ன வாத்தியார், காதலா காதலா, மும்பை எக்ஸ்பிரஸ்’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் சிங்கீதம் சீனிவாச ராவ். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளிலும் படத்தை இயக்கியுள்ளார்.
1972ல் வெளிவந்த தெலுங்குப் படமான ‘நீதி நிஜயதி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சிங்கீதம். தனித்திறன் கொண்ட படைப்பாளியாக கருதப்படும் இவருக்கு நடிகர் கமல் ஹாசன், ‘அபூர்வ சிங்கீதம்’ என்கிற பெயரில் கொண்டாட்ட நிகழ்வை நடத்தினார்.
சிங்கீதம் சீனிவாச ராவ் இயக்கும் அவரது 61-வது திரைப்படத்தை தயாரிக்கவுள்ளதாக வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் அறிவித்திருந்தது. இதில், முன்னணி நடிகர்களாக அயான், அஹில்யா, ஷாலினி ஆகியோர் நடிக்க தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது.
இயக்குநர் நாக் அஸ்வின் தயாரிக்கும் இப்படத்திற்கு ‘சிங் கீதம்’ என பெயரிட்டுள்ளதாக டீசர் வெளியிட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், டீசரில் இப்படத்தை வருகிற ஜூன் 11 ஆம் தேதி வெளியிடவுள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.
தன் 94-வது வயதில் சிங்கீதம் சீனிவாச ராவ் தன் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பை 3 மாதங்களில் முடித்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், படக்குழுவினர் சென்னையில் ‘சிங் கீதம்’ படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சியை நடத்தினார். இதில் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
நிகழ்வில் இயக்குநர் சிங்கிதம் சீனிவாச ராவ் பேசும்போது, “இந்தப் படம் எனது 40 வருடக் கனவு. வார்த்தைகளே பாடல்கள் என்றால், இந்தக் கதையை நான் பலரிடம் சொல்லியிருக்கிறேன் என்ற எண்ணத்தில்தான் இந்தக் கதை பிறந்தது. ஆனால், தெய்வீக அருளால், நாக் அஸ்வின் தயாரிப்பில் வைஜயந்தி மூவிஸ் இறுதியாக இந்தப் படத்தை உருவாக்கும் வாய்ப்பு கிடைத்ததை நான் பாக்கியமாகக் கருதுகிறேன். இந்தப் படத்தை ஆரம்பம் முதல் இறுதி வரை நான் இயக்கினேன். ஆனால், வைஜயந்தி மூவிஸ் மற்றும் நாக் அஸ்வின் ஆகியோர் படத்தின் தயாரிப்பு தொடர்பான அனைத்துப் பொறுப்புகளையும் மிகுந்த அன்புடன் ஏற்றுக்கொண்டனர். நாக் அஸ்வின் ஒரு உலகப் புகழ்பெற்ற இயக்குநர். இந்தப் படத்தைத் தயாரிக்க அவர் முன்வந்தது எனக்குப் பெரும் மகிழ்ச்சியை அளித்தது. அவர் படத்தை விட என்னை அதிகமாக நேசித்தார். அவர் இந்தப் படத்தை மிகுந்த மரியாதையுடன் போற்றுதலுடனும் தயாரித்தார். இந்தப் படத்தின் பெருமை நாக் அஸ்வினையே சாரும். அவர் எனக்கு மிகுந்த மரியாதை கொடுத்தார். அவர் என்னை ஒரு தந்தையைப் போல நடத்தினார். அவர் காட்டிய அன்பு, பாசம் மற்றும் ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
தேவி ஸ்ரீ பிரசாத் இந்தக் கதையை அற்புதமாக புரிந்துகொண்டார். அவரைத் தவிர வேறு யாராலும் இந்தப் படத்திற்கு இத்தகைய அற்புதமான இசையை வழங்கி இருக்க முடியாது என்று நான் நம்புகிறேன். அஸ்வினி தத் சார், நாக் அஸ்வின், தேவி ஸ்ரீ பிரசாத் மற்றும் என் அன்புக்குரிய கமல்ஹாசன் ஆகியோருக்கு என் சிறப்பு நன்றிகள். கமல்ஹாசன் இந்த விழாவிற்கு வருவது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அவருடன் எனக்கு மிகவும் நெருக்கமான ஒரு பிணைப்பு உள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு வந்த அவருக்கு என் சிறப்பு நன்றிகள்” என்றார்.