சினிமா செய்திகள்

"என் கருத்துகள் தவறாக புரிந்துகொள்ளப்பட்டன"- சர்ச்சையான பேச்சுக்கு நடிகர் மகேந்திரன் விளக்கம்

நான் கூறாத விஷயங்களை கூறியதாக சித்தரித்து தவறான குற்றச்சாட்டுகளை சுமத்த வேண்டாம் என்று நடிகர் மகேந்திரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்த கருத்துகள் சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்களை சந்தித்த நிலையில், நடிகர் மகேந்திரன் அதுகுறித்து விளக்கம் அளித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தனது பேட்டியின் ஒரு பகுதி மட்டுமே வைரலாக்கப்பட்டதாகவும், தான் சொல்ல வந்த கருத்து வேறு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

"ஆறு மாதம் அவகாசம் கொடுக்க வேண்டும் என்பதைத்தான் கூறினேன்"

இதுகுறித்து பேசிய மகேந்திரன், "நான் கூறிய கருத்துகள் முழுமையாக புரிந்துகொள்ளப்படவில்லை. குறிப்பிட்ட சிலரிடமே ஆறு மாதம் அவகாசம் கொடுக்க வேண்டும் என்று கூறினேன். பொதுமக்கள் கேள்வி கேட்கக்கூடாது என்ற அர்த்தத்தில் நான் பேசவில்லை. நல்லாட்சியை வழங்குவேன் என்று அண்ணன் கூறிய நம்பிக்கையின் அடிப்படையில்தான் அந்த கருத்தை தெரிவித்தேன்" என்றார்.

மேலும், தனது பேட்டியில் இடம்பெற்ற "சோலார் சிஸ்டம்" என்ற வார்த்தை தவறாக பயன்படுத்தப்பட்டதாக ஒப்புக்கொண்ட அவர், தான் மிகவும் சாதாரணமானவன் என்றும், அந்த இடத்தில் சொல்ல வந்த கருத்தை சரியாக வெளிப்படுத்த முடியாமல் போய்விட்டதாகவும் தெரிவித்தார்.

"சூரிய சக்தி திட்டங்களைத்தான் எடுத்துக்காட்டாக கூறினேன்"

கேரள மாநிலத்தில் உள்ள கொச்சின் சர்வதேச விமான நிலையம் முழுமையாக சூரிய சக்தியால் இயங்குவது தனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியதாக கூறிய மகேந்திரன், அதுபோன்ற திட்டங்கள் தமிழ்நாட்டிலும் அதிகரிக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் அந்த உதாரணத்தை குறிப்பிட்டதாக விளக்கம் அளித்தார்.

மேலும், வீடுகளில் சூரிய மின்சக்தி பயன்பாட்டை ஊக்குவிக்கும் திட்டங்கள் பொதுமக்களுக்கு பயனளிக்கும் என்ற கருத்தையும் தான் வலியுறுத்த முயன்றதாக தெரிவித்தார்.

"என்னை திமிர் பிடித்தவர் என்று சித்தரிக்காதீர்கள்"

தன்னைப் பற்றி பரவி வரும் சில குற்றச்சாட்டுகளுக்கும் மகேந்திரன் பதிலளித்தார். சிறுவயதிலிருந்தே தனக்கு திமிர் அதிகம் என்றும், மூத்தவர்களிடம் மரியாதை இல்லாமல் நடந்து கொண்டதாகவும் கூறப்படுவது உண்மையல்ல என்றார்.

அதேபோல், மக்கள் கஷ்டத்தை பார்த்து சிரிப்பவர் என்ற விமர்சனத்தையும் மறுத்த அவர், "இன்று நான் உண்ணும் ஒவ்வொரு உணவுக்கும் காரணம் மக்கள் தான். என்னை இந்த நிலைக்கு கொண்டு வந்தவர்களை நான் ஒருபோதும் அவமதிக்க மாட்டேன். என்னுடன் பணியாற்றியவர்களுக்கும், என்னை நன்கு அறிந்தவர்களுக்கும் அது தெரியும்" என்று கூறினார்.

"தவறாக புரிந்திருந்தால் மன்னிப்பு கேட்கிறேன்"

தொடர்ந்து பேசிய மகேந்திரன், "நான் சரியாக நடிக்கவில்லை, என் படங்கள் பிடிக்கவில்லை என்றால் அதை விமர்சியுங்கள். அதை திருத்திக்கொள்ள நான் தயாராக இருக்கிறேன். ஆனால் நான் கூறாத விஷயங்களை கூறியதாக சித்தரித்து தவறான குற்றச்சாட்டுகளை சுமத்த வேண்டாம்" என்று கேட்டுக்கொண்டார்.

மேலும், தனது பேச்சால் யாரேனும் மனவேதனை அடைந்திருந்தால் அதற்காக மனப்பூர்வமாக வருத்தம் தெரிவிப்பதாகவும், தேவையானால் மன்னிப்பும் கேட்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். சர்ச்சையான சூழலில் தனக்கு ஆதரவாக நின்று பேசிய அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.