சென்னை,
“எனதருமை நண்பர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘ஜெயிலர் 2’ திரைப்படம் உலகமெங்கிலும் சூப்பர் ஹிட் எனத் தகவல் வந்திருக்கிறது.” என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில், மோகன்லால், சிவராஜ்குமார் ஆகியோர் சிறப்புத் தோற்றங்களில் நடித்துள்ளனர். மேலும், ரம்யா கிருஷ்ணன், மிதுன் சக்கரவர்த்தி, சுராஜ் வெஞ்சரமூடு, யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியான இப்படம், முதல் நாளிலேயே உலகளவில் ரூ.120 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் ரஜினி ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
இந்நிலையில், ‘ஜெயிலர் 2’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன், ரஜினிகாந்த் மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “எனதருமை நண்பர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் நடிப்பில் இன்று (நேற்று) வெளியாகியிருக்கும் ‘ஜெயிலர் 2’ திரைப்படம் உலகமெங்கிலும் சூப்பர் ஹிட் எனத் தகவல் வந்திருக்கிறது. நண்பருக்கும், இயக்குநர் நெல்சன் திலீப்குமார், இசையமைப்பாளர் அனிருத் மற்றும் சன் பிக்சர்ஸ் குழுவினருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இடையிலான நட்பு திரையுலகில் நீண்டகாலமாகப் பேசப்பட்டு வரும் நிலையில், ‘ஜெயிலர் 2’ படத்துக்குக் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்திருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.