சினிமா செய்திகள்

“என் இனிய தமிழ் மக்களே...” - மவுனமான பாரதிராஜாவின் குரல்; முடிந்தது ஒரு சகாப்தம்

மறைந்தாலும் மறையாத பெயராக தமிழ் சினிமா வரலாற்றில் பாரதிராஜா என்றும் நிலைத்திருப்பார்.

சென்னை,

தமிழ் சினிமாவின் கிராமத்து மண்வாசனையை உலக அரங்கிற்கு கொண்டு சென்ற இயக்குநர் பாரதிராஜா இன்று காலமானார். உடல்நலக் குறைவு காரணமாக வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்த அவர், தனது 84-வது வயதில் உயிரிழந்தார். அவரது மறைவு தமிழ் திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகக் கருதப்படுகிறது.

அல்லிநகரத்தில் தொடங்கிய பயணம்

இயக்குநர் பாரதிராஜா கடந்த 1941-ம் ஆண்டு ஜூலை 17-ம் தேதி தேனி மாவட்டம் அல்லிநகரத்தில் பெரியமாயத்தேவர் - கருத்தம்மா தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். அவருடைய இயற்பெயர் சின்னச்சாமி. பள்ளிப் பருவத்திலேயே இலக்கியம், பேச்சுப்போட்டி மற்றும் மேடை நாடகங்களில் அதிக ஆர்வம் காட்டிய அவர், பின்னர் தனது ஊரில் சுகாதார ஆய்வாளராக பணியாற்றினார். ஆனால் சினிமா மீதான ஈர்ப்பு அவரை சென்னைக்கு அழைத்து வந்தது.

போராட்டங்களால் நிரம்பிய தொடக்க காலம்

திரைத்துறையில் வாய்ப்பைப் பெறுவதற்காக பல்வேறு சிரமங்களை சந்தித்தார் பாரதிராஜா. வாழ்வாதாரத்திற்காக மேடை நாடகங்கள், பெட்ரோல் பங்க்கில் வேலை உள்ளிட்ட பல பணிகளை செய்து கொண்டே சினிமாவில் வாய்ப்புக்காக போராடினார்.

அவரது விடாமுயற்சிக்கு பலனாக இயக்குநர் பி. புல்லையாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. அங்கிருந்து தொடங்கிய பயணம் பின்னர் தமிழ் சினிமாவின் வரலாற்றையே மாற்றியது.

‘16 வயதினிலே’ மூலம் தொடங்கிய புரட்சி

1977-ம் ஆண்டு வெளியான ‘16 வயதினிலே’ திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமான பாரதிராஜா, தனது முதல் படத்திலேயே தமிழ் சினிமாவில் புதிய பாதையை உருவாக்கினார்.

‘16 வயதினிலே’ திரைப்படம் பாரதிராஜாவுக்கு மட்டுமல்லாமல் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்தின் திரைப்பயணத்திலும் முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது.

கிராமத்து மண்வாசனையை திரைக்கு கொண்டு வந்தவர்

தமிழ் சினிமாவை ஸ்டூடியோவிலிருந்து வெளியே கொண்டு வந்த பெருமை பாரதிராஜாவையே சாரும். மண் சார்ந்த வாழ்வியல், கிராமத்து மக்களின் உணர்வுகள், காதல், உறவுகள் மற்றும் சமூக பிரச்சினைகளை தனது படைப்புகளில் இயல்பாக பதிவு செய்தார்.

கதைக்கு ஏற்ப நேரடியாக கிராமங்களுக்குச் சென்று இயற்கை சூழலில் படப்பிடிப்பு நடத்தி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தினார்.

‘கிழக்கே போகும் ரயில்’, ‘சிகப்பு ரோஜாக்கள்’, ‘அலைகள் ஓய்வதில்லை’, ‘முதல் மரியாதை’ உள்ளிட்ட பல காலத்தால் அழியாத படைப்புகளை வழங்கியுள்ளார். இயக்குநராக அவர் 40-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

தேசிய விருதுகளும் பத்மஸ்ரீ கவுரவமும்

தமிழ் சினிமாவின் மிக முக்கியமான படைப்பாளிகளில் ஒருவராக விளங்கிய பாரதிராஜா, தனது திரைப்படங்களுக்காக 6 தேசிய விருதுகளை வென்றுள்ளார்.

திரைத்துறைக்கான அவரது பங்களிப்பை பாராட்டி, 2004-ஆம் ஆண்டு இந்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ விருதை வழங்கி கவுரவித்தது.

நடிகராகவும் தனி முத்திரை

இயக்குநராக மட்டுமல்லாமல் நடிகராகவும் பாரதிராஜா ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். ‘ஆயுத எழுத்து’, ‘திருச்சிற்றம்பலம்’, ‘ஈஸ்வரன்’, ‘ராக்கி’, ‘நம்ம வீட்டுப் பிள்ளை’, ‘பாண்டிய நாடு’, ‘மீண்டும் ஒரு மரியாதை’, ‘அன்னக்கொடி’, ‘ரெட்ட சுழி’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் குறிப்பிடத்தக்க கதாபாத்திரங்களில் நடித்தார்.

கடந்த 2025-ல் வெளியான ‘நிறம் மாறும் உலகில்’ திரைப்படத்திலும் நடித்திருந்தார்.

“என் இனிய தமிழ் மக்களே...”

“என் இனிய தமிழ் மக்களே, நான் உங்கள் பாசத்திற்குரிய பாரதிராஜா பேசுகிறேன்...”

எந்த மேடையாக இருந்தாலும் இந்த வார்த்தைகளுடன்தான் தனது உரையை தொடங்குவார் பாரதிராஜா. அந்த குரல் இன்று மவுனமாகி இருந்தாலும், அவர் உருவாக்கிய கதைகளும் கதாபாத்திரங்களும் தலைமுறைகள் கடந்தும் வாழும்.

திரையுலகம் கண்ணீர் அஞ்சலி

பாரதிராஜாவின் மறைவு செய்தி வெளியாகியதைத் தொடர்ந்து திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்கள் மூலம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

கிராமத்து மக்களின் வாழ்க்கையை வெள்ளித்திரையில் உயிரோட்டமாக பதிவு செய்த அந்த மகத்தான கலைஞருக்கு தமிழ் திரையுலகம் இன்று கண்ணீருடன் இறுதி அஞ்சலி செலுத்தி வருகிறது.

மறைந்தாலும் மறையாத பெயராக தமிழ் சினிமா வரலாற்றில் பாரதிராஜா என்றும் நிலைத்திருப்பார்.

பாரதிராஜா இயக்கிய தமிழ் திரைப்படங்கள்

16 வயதினிலே (1977)

கிழக்கே போகும் ரயில் (1978)

சிகப்பு ரோஜாக்கள் (1978)

புதிய வார்ப்புகள் (1979)

நிறம் மாறாத பூக்கள் (1979)

கல்லுக்குள் ஈரம் (1980)

நிழல்கள் (1980)

அலைகள் ஓய்வதில்லை (1981)

டிக் டிக் டிக் (1981)

காதல் ஓவியம் (1982)

வாலிபமே வா வா (1982)

மண்வாசனை (1983)

புதுமைப் பெண் (1984)

ஒரு கைதியின் டைரி (1985)

முதல் மரியாதை (1985)

ஒரு ராதையின் கதை (1986)

வேதம் புதிது (1987)

கொடி பறக்குது (1988)

என் உயிர் தோழன் (1990)

புது நெல்லு புது நாத்து (1991)

நாடோடித் தென்றல் (1992)

கிழக்குச் சீமையிலே (1993)

கருத்தம்மா (1994)

பசும்பொன் (1995)

அந்திமந்தாரை (1996)

தமிழ்ச் செல்வன் (1996)

தாஜ்மகால் (1999)

கடல் பூக்கள் (2001)

ஈர நிலம் (2004)

பொம்மலாட்டம் (2008)

அன்னக்கொடி (2013)

மீண்டும் ஒரு மரியாதை (2020)

இயக்குநர் பாரதிராஜா தமிழ் திரைப்படங்களைத் தவிர, தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளிலும் சில படங்களை இயக்கியுள்ளார்.