சினிமா செய்திகள்

ரசிகர்களை ஈர்ப்பதுதான் என்னுடைய லட்சியம் - நடிகை அதுல்யா ரவி

தமிழ் படங்கள் மட்டுமின்றி தெலுங்குத் திரைப்படங்களிலும் நடித்து வரும் அதுல்யா ரவி, மாடலிங் துறையிலும் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார்.

சென்னை,

“ரசிகர்களை ஈர்ப்பதுதான் என்னுடைய லட்சியம். அதற்கேற்ற வகையில்தான் கதைகளைத் தேர்வு செய்து நடித்து வருகிறேன். ஒவ்வொரு படத்திலும் ரசிகர்களுக்கு புதுமையான அனுபவத்தை வழங்க வேண்டும் என்று விரும்புகிறேன்.” என்று நடிகை அதுல்யா ரவி தெரிவித்துள்ளார்.

காதல் கண் கட்டுதே மூலம் அறிமுகம்

தமிழ் திரையுலகில் இளம் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் அதுல்யா ரவி. வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் இவர், தொடர்ந்து புதிய வாய்ப்புகளைத் தேடி வருகிறார்.

கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த அதுல்யா ரவி, கடந்த 2017-ம் ஆண்டு வெளியான ‘காதல் கண் கட்டுதே’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாகத் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். முதல் படத்திலேயே இளைஞர்களின் கவனத்தை ஈர்த்த இவர், தொடர்ந்து திரைப்பட வாய்ப்புகளைப் பெற்றார்.

தமிழ், தெலுங்கு படங்களில் கவனம்

இதைத்தொடர்ந்து ‘நாடோடிகள்-2’, ‘முருங்கைக்காய் சிப்ஸ்’, ‘சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்’, ‘டீசல்’, ‘மிஸ்டர் எக்ஸ்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழ் படங்கள் மட்டுமின்றி தெலுங்குத் திரைப்படங்களிலும் நடித்து வரும் அதுல்யா ரவி, மாடலிங் துறையிலும் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார்.

திரைப்படங்களில் நடிப்பதுடன், சமூக வலைத்தளங்களிலும் இவருக்கு கணிசமான ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 20 லட்சத்துக்கும் அதிகமானோர் இவரைப் பின்தொடர்ந்து வருகின்றனர்.

புதிய சவால்களை ஏற்கத் தயார்

தனது திரைப்பயணம் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து அதுல்யா ரவி கூறும்போது: “ரசிகர்களை ஈர்ப்பதுதான் என்னுடைய லட்சியம். அதற்கேற்ற வகையில்தான் கதைகளைத் தேர்வு செய்து நடித்து வருகிறேன். ஒவ்வொரு படத்திலும் ரசிகர்களுக்கு புதுமையான அனுபவத்தை வழங்க வேண்டும் என்று விரும்புகிறேன்.விரைவில் புதிய பரிமாணங்களில் ரசிகர்களைச் சந்திப்பேன். என்னைப் பொறுத்தவரை, மனதைத் தொடும் கதாபாத்திரமாக இருந்தால் அது எந்த மாதிரியான கதாபாத்திரமாக இருந்தாலும் தயங்காமல் நடிப்பேன். வழக்கமான கதாபாத்திரங்களைத் தாண்டி, வித்தியாசமான கதைகளிலும் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன். புதிய சவால்களை ஏற்கவும் தயாராக இருக்கிறேன்” என்றார்.

SCROLL FOR NEXT