மும்பை,
பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஆலியா பட் தற்போது இயக்குனர் ஷிவ் ரவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஆல்பா' திரைப்படத்தில் நடித்துள்ளார். பிரபல தயாரிப்பு நிறுவனமான யாஷ் ராஜ் பலிம்ஸ் இந்த படத்தை மிகப்பெரிய பொருட்செலவில் தயாரித்துள்ளது.
இதுவரை ஆண் கதாபாத்திரங்களை மையமாகக் கொண்டு ‘ஸ்பை யுனிவர்ஸ்’ படங்களை உருவாக்கி வந்த யாஷ் ராஜ் நிறுவனம், முதல் முறையாக பெண் கதாபாத்திரத்தை மையமாக வைத்து 'ஆல்பா' திரைப்படத்தை உருவாக்கியுள்ளது. இந்த படத்தில் பாபி தியோல், அனில் கபூர் மற்றும் ஷர்வரி வாக் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த நிலையில் ஆலியா பட்டின் தாயாரும், நடிகையுமான சோனி ரஸ்தான், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சோனி ரஸ்தானின் 97 வயது தாய் ஜெட்ரூட் ஹோல்சர், சோனி ரஸ்தான், அவரது மகள்கள் ஆலியா பட், ஷாகீன் பட் மற்றும் ஆலியா பட்டின் பெண் குழந்தை ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 தலைமுறை பெண்கள் இடம்பெற்றுள்ள அந்த புகைப்படம் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
மேலும் அந்த பதிவில் சோனி ரஸ்தான், “எனது தாயாருக்கு 97 வயது ஆகிறது. இன்று அவரது பிறந்தநாள் கிடையாது, ஆனால் தனது பேத்தியின் ‘ஆல்பா’ திரைப்படம் ரிலீஸாக உள்ளதால், ஆலியாவை எனது தாய் வாழ்த்த விரும்பினார்.
எனது தாயார் ஜெட்ரூட் ஹோல்சர், உண்மையில் அவர்தான் ஓ.ஜி. ஆல்பா. அவர் 6 வயதாக இருக்கும்போது நாஜிக்களிடம் இருந்து தப்பி வந்தவர். அவர் யூதர் அல்ல, ஜெர்மன் நாட்டை சேர்ந்தவர்தான். இருந்தாலும், எனது தாத்தா மிகவும் துணிச்சலானர். அவர் ஹிட்லரை நேரடியாக எதிர்த்தார்.
இதன் காரணமாக அவர்கள் ஜெர்மனியை விட்டு தப்பிவர வேண்டிய சூழல் ஏற்பட்டது. சில ஆண்டுகள் செக் குடியரசு நாட்டில் வசித்த அவர்கள், ஒரு யூத குழந்தைகளுக்கான ரெயிலில் ஏறி இங்கிலாந்திற்கு தப்பிச் சென்றனர். எனது தாயார் தனது வாழ்க்கையில் பல துன்பங்களை சந்தித்துள்ளார்.
பின்னர் எனது தந்தை நரேந்திர ரஸ்தானை சந்தித்து, அவரை திருமணம் செய்து கொண்டு இந்தியாவில் புதிய வாழ்க்கையை ஆரம்பித்தார். ‘ஆல்பா’ பெண்கள் நம்மை சுற்றி பல்வேறு விதங்களிலும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். நமது தாய்மார்கள், பாட்டிமார்கள் எல்லோருமே ‘ஆல்பா’ பெண்கள்தான்” என்று தெரிவித்துள்ளார்.