சென்னை,
'லப்பர் பந்து' திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே கவனம் பெற்ற நடிகை சுவாசிகா, அதனைத் தொடர்ந்து 'மாமன்', 'கருப்பு' உள்ளிட்ட படங்களில் நடித்து வரவேற்பைப் பெற்றார். தற்போது நடிகர் விஜய் ஆண்டனியுடன் இணைந்து 'நூறு சாமி' திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இயக்குநர் சசி இயக்கத்தில் வெளியாகியுள்ள இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், படத்திற்கு கிடைத்து வரும் ஆதரவு குறித்து நடிகை சுவாசிகா மனம் திறந்து பேசியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், "எல்லா தமிழ் மக்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றி. இந்த நேரத்தில் நன்றியைத் தவிர வேறு எதையும் என்னால் சொல்ல முடியவில்லை. என் மீது நீங்கள் காட்டும் அன்பையும் பாசத்தையும் வார்த்தைகளால் விவரிக்க முடியாது. நான் கதாநாயகியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ஒரு படம் இத்தனை திரையரங்குகளில் வெளியாகி, இவ்வளவு பெரிய வரவேற்பைப் பெறும் என்று ஒருநாளும் கற்பனை செய்து பார்த்ததில்லை. ஆனால் இன்று அது நிஜமாகியுள்ளது," என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய சுவாசிகா, "தமிழ் ரசிகர்கள் கொடுக்கும் இந்த மாபெரும் ஆதரவிற்கு நான் எப்போதும் கடமைப்பட்டிருக்கிறேன். தற்போது என்னுடைய ஆக்ஸிஜனே தமிழ் ரசிகர்கள்தான். இனி வரும் காலங்களில் இன்னும் அதிக பொறுப்புடன் கதைகளைத் தேர்வு செய்து, உங்களை ஏமாற்றாத வகையில் கடினமாக உழைத்து நல்ல கதாபாத்திரங்களில் நடிப்பேன்," என்று கூறியுள்ளார்.
சுவாசிகாவின் இந்த உணர்வுபூர்வமான பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.