மும்பை,
பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், நடிகர் சேகர் சுமன் தொகுத்து வழங்கும் ‘சேகர் டுநைட்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது, இந்தியாவில் தற்போது அமைதி இல்லை என தெரிவித்த கருத்து சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, தனது பேச்சு குறித்து சஞ்சய் தத் விளக்கம் அளித்துள்ளார்.
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஒளிபரப்பான நிகழ்ச்சியில் சஞ்சய் தத், நாட்டின் தற்போதைய நிலை குறித்து பேசினார். அப்போது, “இந்த நாட்டின் மக்கள் மிகவும் அன்பானவர்கள். இங்கு அமைதி நிலவ வேண்டும். ஆனால், தற்போது நமது நாட்டில் அந்த அமைதியை என்னால் உணர முடியவில்லை. இந்தியர்கள் பரந்த மனம் கொண்டவர்கள், விருந்தோம்பலில் சிறந்தவர்கள். நாம் நிறைய கொடுத்திருக்கிறோம். தொடர்ந்து அப்படியே இருக்க வேண்டும்” என்று அவர் கூறியிருந்தார். சஞ்சய் தத்தின் இந்த பேச்சு சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தின.
இந்நிலையில், தனது எக்ஸ் பக்கத்தில் அதற்கு விளக்கம் அளித்த சஞ்சய் தத், எந்தவொரு தனிநபர், சமூகத்தினர் அல்லது நிறுவனத்தின் உணர்வுகளையும் புண்படுத்தவோ, அவமதிக்கவோ தனது நோக்கம் இல்லை. நிகழ்ச்சியில் பேசியவை முன்கூட்டியே திட்டமிடப்பட்ட, நகைச்சுவை மற்றும் இலகுவான உரையாடலின் ஒரு பகுதியாக இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், ‘முன்னா பாய்’ திரைப்படங்களில் இடம்பெற்ற நகைச்சுவை மற்றும் நையாண்டி, குறிப்பாக ‘காந்திகிரி’ கருத்தை அடிப்படையாகக் கொண்டே தனது பேச்சு அமைந்திருந்ததாகவும், அதன் மூலம் அன்பு, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை வலியுறுத்துவதே நோக்கம் என்றும் சஞ்சய் தத் விளக்கம் அளித்துள்ளார். தனது பேச்சு கூறப்பட்ட சூழலில் இருந்து விலகி வேறு விதமாகப் புரிந்துகொள்ளப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.