சினிமா செய்திகள்

என் ரோல் மாடல் ராதிகா - நடிகை ஊர்வசி

பாண்டிராஜ் இயக்கத்தில் ஜெயராம், ஊர்வசி நடிக்கும் ‘பரிமளா & கோ’ படம் வரும் ஜூன் 5ம் தேதி வெளியாகவுள்ளது.

மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பாக்யராஜ் இயக்கி ஹீரோவாக நடித்த ‘முந்தானை முடிச்சு’ என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் ஊர்வசி. கமல்ஹாசன், ராம்கி உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். குறிப்பாக கமல்ஹாசனுடன் இவர் நடித்த ‘மைக்கேல் மதன காமராஜன்’ திரைப்படம் இன்றைக்கும் ஒரு ஐகானிக் படமாக இருக்கிறது.

சிறந்த நடிகைக்கான கேரள மாநில திரைப்பட விருதை பல முறை வென்றுள்ளார். மேலும் இவர் 2 முறை தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகளையும் பெற்றுள்ளார். நடிகை ஊர்வசி 2000 ஆம் ஆண்டு, நடிகர் மனோஜ் கே. ஜெயனை மணந்தார், அவருக்கு தேஜா லட்சுமி என்ற மகள் உள்ளார். ஆனால் அவர்களது திருமண வாழ்க்கை நீண்ட காலம் நீடிக்கவில்லை. 2008 இல் அவர்கள் விவாகரத்து செய்தனர். அதன் பிறகு, ஊர்வசி 2013 இல் சிவ பிரசாத்தை இரண்டாவது முறையாக மணந்தார். அவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

‘பரிமளா & கோ’ படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பாக்யராஜ், ராதிகா ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றிருந்தனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய, நடிகை ராதிகா, “ஊர்வசி படங்களில் பேசுவது யாருக்குமே கேட்காது” என்று சொல்ல, அதற்கு ஊர்வசி, “எல்லோரும் வேகமாக பேசுங்கள் என்று சொல்வார்கள். ஆனால் நான் பேசுவதில்லை. என்னை வைத்து எந்த மொழியில் வேண்டுமானாலும் படம் பண்ணலாம் என்று சொல்வார்கள்” என ஊர்வசி குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து பேசிய ஊர்வசி, “இத்தனை வருஷத்தில், எல்லாரும் என்கிட்ட வந்து, 'உனக்கு மனோரமா ஆச்சியோட திறமையில ஒரு பத்து சதவீதம் இருக்கு' சாவித்ரி மாதிரி இருக்கே அப்படின்னு பலவிதமா சொல்லியிருக்காங்க. ஆனா, இதுவரைக்கும் என்கிட்ட யாருமே கேட்காத ஒரு விஷயம் இருக்கு: 'சினிமாவுக்கு வந்த பிறகு, நீங்க யாரை உங்க ரோல் மாடலா எடுத்துக்கிட்டீங்க?' நடிகை ராதிகாதான் என்னோட ரோல் மாடல், இதை நான் முதல் முறையா இப்பதான் சொல்றேன்.

அவங்களோட படங்களை நான் எத்தனை தடவை பார்த்து ரசிச்சிருக்கேன்னு யாருக்குமே தெரியாது. இன்று போய் நாளை வா, பொய் சாட்சி... இப்படி எத்தனையோ, எத்தனையோ படங்கள்! அவங்க நடிச்ச படங்களோட கணக்கு அவங்களுக்கே கூட தெரியாம இருக்கலாம், ஆனா அந்த அளவுக்கு நான் அவங்களை வியந்து பார்த்திருக்கேன். நான் சினிமாவுக்கு வந்த பிறகு, ஒரு சீனியர் ஆர்ட்டிஸ்ட் அப்படிங்கிற எந்த பாகுபாடும் காட்டாம, என் தோள் மேல கை போட்டு அவ்வளவு நட்பா நடத்துன ஒரே கதாநாயகி அவங்க மட்டும்தான்” என்று ராதிகா குறித்து நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.