சினிமா செய்திகள்

“என் மகனுக்கு உங்களை மிகவும் பிடிக்கும்”- விஜய் கூறிய வார்த்தைகளை நினைவுகூர்ந்த சந்தீப் கிஷன்

விஜய் உடனான தனது முதல் சந்திப்பு குறித்து சந்தீப் கிஷன் மனம் திறந்து பேசியுள்ளார்.

தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்கி வருபவர் சந்தீப் கிஷன். தமிழில் 'யாருடா மகேஷ்' படத்தின் மூலம் அறிமுகமான அவர், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'மாநகரம்' திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். இதனைத் தொடர்ந்து "நெஞ்சில் துணிவிருந்தால், மாயவன், கசடதபற, கேப்டன் மில்லர், ராயன்" உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

தற்போது விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் 'சிக்மா' திரைப்படத்தில் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

விஜய்யுடனான முதல் சந்திப்பு

சமீபத்தில் அளித்த பேட்டியில் விஜய் உடனான தனது முதல் சந்திப்பு குறித்து சந்தீப் கிஷன் மனம் திறந்து பேசியுள்ளார். அவர் கூறுகையில், “நான் விஜய் அவர்களை முதன்முதலாக லியோ படத்தின் துவக்க விழாவில் சந்தித்தேன். அப்போது லோகேஷ் கனகராஜ் என்னை விஜய் சாரிடம் அழைத்துச் சென்றார். விஜய் சார் மிகவும் இனிமையாகவும், பணிவாகவும் நடந்துகொண்டார். நான் நடித்த படங்கள் குறித்து பேசினார். குறிப்பாக மாநகரம் படத்தில் நான் பேசிய வசனத்தைக் குறிப்பிட்டு நீண்ட நேரம் உரையாடினார்” என்றார்.

என் மகனுக்கு உங்களை மிகவும் பிடிக்கும்

மேலும், “அப்போது விஜய் சார், ‘என் மகனுக்கு உங்களை மிகவும் பிடிக்கும்’ என்று கூறினார். அதேபோல், சஞ்சய் என்னை முதன்முதலில் சந்தித்தபோதும், ‘உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும். உங்கள் படங்களை பார்த்திருக்கிறேன்’ என்று கூறினார்” என சந்தீப் கிஷன் தெரிவித்தார்.

பெருமையாக உணர்ந்த தருணம்

“நாம் உருவாக்கும் படைப்புகளை இப்படிப்பட்ட முக்கியமான நபர்கள் கவனிக்க வேண்டும் என்று நினைப்போம். அது உண்மையில் நடந்தது எனக்கு மிகுந்த பெருமையாக இருந்தது” என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். சந்தீப் கிஷனின் இந்த பேட்டி தற்போது விஜய் ரசிகர்கள் மற்றும் திரைப்பட ரசிகர்கள் மத்தியில் சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.