நாகார்ஜுனாவின் 100வது படத்தின் டைட்டில் கிளிம்ப்ஸ் நாளை(ஆகஸ்ட் 29) அவரது பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த நட்சத்திரங்களின் பட்டியலில் தற்போது நடிகர் நாகார்ஜுனாவும் இணைய உள்ளார். தென்னிந்திய சினிமாவில் ரஜினிகாந்த், சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா, கமல்ஹாசன், மோகன்லால், மம்முட்டி போன்ற ஜாம்பவான்கள் மட்டுமே இந்த அரிதான சாதனையை கொண்டுள்ளனர்.
நாகார்ஜுனா கடந்த 1986-ல் ‘விக்ரம்’ படத்தின் மூலம் அறிமுகமானார். இத்திரைப்படம் இந்தியில் வெளியான ‘ஹீரோ’ படத்தின் ரிமேக் என்பது குறிப்பிடத்தக்கது. ஆரம்பத்தில் விமர்சனங்களை சந்தித்தாலும், பின்னர் தனது முத்திரையைப் பதித்து தெலுங்கு சினிமாவின் சிறந்த நட்சத்திரமாக நிலைநிறுத்திக் கொண்டார். தெலுங்கில் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியை பல வருடங்களாக தொகுத்து வழங்கி வருகிறார்.
நாகார்ஜுனாவின் 100-வது படத்தை தமிழ் இயக்குனர் ரா.கார்த்தி இயக்க இருக்கிறார். நாகார்ஜுனா இரட்டை வேடங்களில் நடிப்பார் என்றும் கூறப்படுகிறது. இந்த படத்தை அன்னபூர்ணா ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது. ‘நித்தம் ஒரு வானம்’, ‘ஆகாசம்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய தமிழ் இயக்குநர் ரா. கார்த்திக் இந்த படத்தை இயக்குகிறார். தற்போது இந்தப் படத்திற்கு தற்காலிகமாக ‘கிங் 100’ என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தப் படத்தில், நாகார்ஜுனா 25 வயது முதல் 60 வயது வரை பல்வேறு வயது தோற்றங்களில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அதிநவீன டி-ஏஜிங் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. நாக சைதன்யா மற்றும் அகில் அக்கினேனி ஆகியோர் சிறப்பு தோற்றங்களில் நடிக்கலாம் என்றும், இசையமைப்பாளராக தேவி ஸ்ரீ பிரசாத் இணைவார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தில் மூன்று கதாநாயகிகள் இடம்பெறவுள்ளதாகவும் கூறப்படுகிறது. சுஷ்மிதா பட் கதாநாயகிகளில் ஒருவராக இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், நாகார்ஜுனாவின் 100-வது படத்தில் நடிகை தபு முக்கிய வில்லி கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏறக்குறைய 28 ஆண்டுகளுக்குப் பிறகு நாகார்ஜுனா - தபு கூட்டணி மீண்டும் இணைகிறது என்பதும், அதிலும் தபு வில்லி கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பதும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
நாகார்ஜுனாவின் 100வது படத்தின் டைட்டில் கிளிம்ப்ஸ் நாளை(ஆகஸ்ட் 29) அவரது பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.