சினிமா செய்திகள்

படப்பிடிப்பு விபத்தில் நடிகர் பாலகிருஷ்ணா காயம்

காயம் காரணமாக பாலகிருஷ்ணா நடிக்கும் 111-வது படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான பாலகிருஷ்ணா, படப்பிடிப்பு தளத்தில் நடந்த எதிர்பாராத விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தெலுங்கு திரை உலகில் இளம்கதாநாயகர்களுடன் போட்டி போட்டு நடித்து வெற்றிப் படங்களை கொடுத்து வருபவர் பாலகிருஷ்ணா. சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான ‘அகண்டா-2’ படம் நல்ல வரவேற்பை பெற்றது. அவரது படங்கள் எல்லாம் பிளாக் பஸ்டர் படங்களாக அமைகின்றன.

இவர் மறைந்த நடிகர் என்.டி.ராமராவ் மகனாவார். பாலைய்யாவின் மிரட்டலான ஆக்சன் காட்சிகளுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் தற்போது தெலுங்கு தேசம் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்று எம்எல்ஏ ஆக உள்ளார்.

ரித்தி சினிமாஸ் தயாரிப்பில் உருவாகும் 111-வது படத்தை இயக்குநர் கோபிசந்த் மலினேனி இயக்கிவருகிறார். இந்தப் படத்தில் காஜல் அகர்வால், சமுத்திரக்கனி, மஞ்சு மனோஜ், சரத் குமார், அபிமன்யு சிங், சுவாசிகா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.

பாலகிருஷ்ணா நடிக்கும் 111-வது படத்தின் படப்பிடிப்பு ஆந்திர மாநிலம் காக்கினாடா துறைமுகப் பகுதியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்திற்காக பிரமாண்டமான ஆக்ஷன் காட்சி ஒன்று படமாக்கப்பட்டு வந்தது. ஆபத்தான சண்டைக் காட்சிக்கு 'டூப்' போடாமல் பாலகிருஷ்ணா நடித்துக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக கால் நழுவி கீழே விழுந்ததில், அவரது முழங்காலில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டுக் காக்கினாடாவில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

மருத்துவமனையில் அவருக்கு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டு, முழங்கால் காயத்திற்கான தீவிர சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது பாலக்கிருஷ்ணாவின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், ரசிகர்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி அவர் சில நாட்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்பதால், காக்கினாடாவில் நடந்து வந்த பாலகிருஷ்ணா நடிக்கும் 111-வது படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இயக்குநர் கோபிசந்த் மலினேனி, பாலகிருஷ்ணா விரைவில் குணமடைந்து படப்பிடிப்புக்கு திரும்புவார் என்று பதிவிட்டுள்ளார்.