சினிமா செய்திகள்

“சூர்யா 47” படத்தில் நடிக்கும் நஸ்லெனுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய படக்குழு

‘பிரேமலு’ நாயகன் நஸ்லென் பிறந்த நாளையொட்டி ‘சூர்யா 47’ படக்குழு போஸ்டர் வெளியிட்டு வாழ்த்தியுள்ளது.

மலையாளத் திரைத்துறையில் வளர்ந்துவரும் நட்சத்திர நடிகரான நஸ்லென் ‘பிரேமலு’ மூலம் பெரிதாக கவனிக்கப்பட்டார். தொடர்ந்து வெளியான ‘ஆலப்புழை ஜிம்கானா’ படமும் வணிக ரீதியான வெற்றியைப் பெற்றது. நஸ்லென் , கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மெகா ஹிட்டான படம் ‘லோகா’. நஸ்லென் மற்றும் இயக்குனர் கிரிஷ் இணைந்து பணியாற்றிய ‘ஐ அம் காதலன்’ படம் வருகிற ஆகஸ்ட் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

நஸ்லென்,காலித் ரஹ்மான் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். மேலும்கலித் ரகுமான் இயக்கத்தில் மம்முட்டி நடிக்கும் ‘மட்டஞ்சேரி மாபியா’ படத்திலும் நஸ்லென் நடிக்கவிருக்கிறார். நஸ்லென் நடித்த ‘மோலிவுட் டைம்ஸ்’ கடந்த 5ம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா, பிரபல மலையாள இயக்குனர் ஜித்து மாதவன் இயக்கத்தில் தனது 47-வது படத்தில் நடித்து வருகிறார். தற்காலிகமாக ‘சூர்யா 47’ என அழைக்கப்படும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த படத்தில் சூர்யாவுடன் மலையாள நடிகர் நஸ்லென் மற்றும் நடிகை நஸ்ரியா நசீம் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும், இசையமைப்பாளர் சுஷின் ஷ்யாம் இசையமைக்கிறார். ழகரம் ஸ்டூடியோஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.

நடிகர் சூர்யா காவல்துறை அதிகாரியாக நடித்து வருவதால் பெரிய எதிர்பார்ப்பும் இருக்கிறது. தற்போது, இப்படத்தைத் தீபாவளி வெளியீடாகக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், நஸ்லென் பிறந்த நாளுக்கு படக்குழு போஸ்டர் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது. சூர்யா மற்றும் ஜோதிகாவின் தயாரிப்பு நிறுவனமான ‘ழகரம் ஸ்டுடியோஸ்’ தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் இந்த போஸ்டரைப் பகிர்ந்து, “படப்பிடிப்பு தளத்தில் எப்போதும் புன்னகையையும், துள்ளலான ஆற்றலையும் கொண்டு வரும் நஸ்லனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்” எனப் பதிவிட்டுள்ளது.

SCROLL FOR NEXT