சென்னை,
விஷ்ணு எடவன் இயக்கத்தில் நயன்தாரா, கவின் நடித்துள்ள ‘ஹாய்’ படத்தின் 3வது பாடலின் புரோமோ வெளியானது.
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, நடிகர் கவினுடன் இணைந்து ‘ஹாய்’ என்ற படத்தில் நடித்துவருகிறார். இந்த படத்தினை லோகேஷ் கனகராஜிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த விஷ்ணு எடவன் இயக்குகிறார். இந்தப் படத்தினை, '7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ்' மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவனின் 'ரௌடி பிக்சர்ஸ்' ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.
வயதில் சிறியவன் தனக்கு மூத்த வயதுடைய ஒரு பெண்ணின் மீது காதலில் விழுகிறான் போன்ற கதைக்களத்தில் இப்படம் உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளது.
ஜென் மார்டின் இசையமைப்பில், விஷ்ணு எடவன் எழுதிய வரிகளுக்கு ஜி.வி. பிரகாஷ் குமார் பாடிய 'கண்ணக்குழியா' பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இப்படத்தின் இரண்டாவது பாடலான 'ரசகுல்லா' சமீபத்தில் வெளியானது. இசையமைப்பாளர் ஜென் மார்டின் இசையில் உருவாகியுள்ள இந்தப் பாடலை, முன்னணி இசையமைப்பாளரும் பாடகருமான அனிருத் பாடியுள்ளார்.
படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், 'ஹாய்' திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 14-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், இந்தப் படத்திற்கு தணிக்கை வாரியம் 'யு/ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளது.
இந்நிலையில், ‘ஹாய்’ படத்தின் 3வது பாடலின் புரோமோ வெளியாகியுள்ளது. முழுபாடல் நாளை வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.