சினிமா செய்திகள்

சென்னை காளிகாம்பாள் கோவிலில் நயன்தாரா சாமி தரிசனம்

நயன்தாரா நடித்த ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படம் நவம்பர் 6-ம் தேதி வெளியாகவுள்ளது.

சென்னை காளிகாம்பாள் கோவிலில் நடிகை நயன்தாரா சாமி தரிசனம் செய்தார். பெண் பக்தர்களுக்கு புடவை உள்ளிட்ட பொருட்களை நயன்தாரா அன்னதானமாக வழங்கினார் .

நயன்தாரா நடிப்பில், ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் கடந்த 2020-ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'மூக்குத்தி அம்மன்'. நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதைத்தொடர்ந்து, இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. முதல் பாகத்தை ஆர்.ஜே. பாலாஜி இயக்கிய நிலையில், இரண்டாம் பாகத்தை சுந்தர்.சி இயக்கியுள்ளார். இப்படத்தில் நயன்தாராவுடன் ரெஜினா கசாண்ட்ரா, அபிநயா, ஊர்வசி, யோகிபாபு, மைனா நந்தினி, துனியா விஜய், சிங்கம்புலி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் இப்படத்தைத் தயாரித்துள்ளார். குஷ்பு சுந்தர் மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோரும் தயாரிப்பில் இணைந்துள்ளனர். இப்படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார்.

நவம்பர் 6-ல் ரிலீஸ்

‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் நவம்பர் 6-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இதையடுத்து, படக்குழுவினர் விளம்பரப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

காளிகாம்பாள் கோவிலில் வழிபாடு செய்த நயன்தாரா

‘மூக்குத்தி அம்மன் 2’ படம் வெளியாக இன்னும் இரு தினங்களே உள்ள நிலையில், படம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இன்று சென்னையில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க காளிகாம்பாள் கோவிலுக்குச் சென்று வழிபாடு செய்துள்ளார். பெண் பக்தர்களுக்கு புடவை உள்ளிட்ட பொருட்களை நயன்தாரா அன்னதானமாக வழங்கினார் .

முன்னதாக, ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தின் முன்னோட்ட விழா கடந்த வாரம் நடைபெற்றது. விழாவில் பிரபலங்கள் பலர் பங்கேற்று படத்தின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்ததுடன் பல்வேறு சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்தனர். அப்போது பேசிய இயக்குநர் சுந்தர்.சி, ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்திற்கான தடைகள் நீங்க விரதம் இருந்து மாசாணி அம்மன் கோவிலுக்கு வேண்டிக் கொண்டவர் நயன்தாரா. அவரது அர்ப்பணிப்பு பாராட்டுக்குரியது என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT