சென்னை,
இப்படத்தின் தொடக்க விழா சென்னையில் நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் கிளாப் போர்டு அடிக்க, ‘மண்டாடி’ படத்தின் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் கேமராவை இயக்கி படப்பிடிப்பைத் தொடங்கி வைத்தார்.
‘வெண்ணிலா கபடிக்குழு’ திரைப்படத்தின் மூலம் நகைச்சுவை நடிகராகப் பிரபலமானவர் சூரி. வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான ‘விடுதலை’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான இவர், தொடர்ந்து ‘கருடன்’, ‘கொட்டுக்காளி’, ‘மாமன்’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். இவரது நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றன.
சமீபத்தில் மதிமாறன் இயக்கத்தில் சூரி நடித்த ‘மண்டாடி’ திரைப்படம் வெளியானது. கடலில் நடைபெறும் படகுப் போட்டியை மையமாகக் கொண்டு உருவான இப்படத்தில் மகிமா நம்பியார், சுஹாஸ், சத்யராஜ், ரவீந்திரா விஜய், அச்யுத் குமார், சாச்சனா நமிதாஸ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படத்தில் சூரியின் நடிப்பும் கவனம் பெற்றது.
இதனைத் தொடர்ந்து, ‘இன்று நேற்று நாளை’, ‘அயலான்’ ஆகிய படங்களை இயக்கிய ரவிக்குமார் இயக்கத்தில் சூரி புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் சார்பில் நவீன் யெர்னேனி, ஒய். ரவி சங்கர் ஆகியோர் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றனர். சூரியின் ஏழாவது படமாக உருவாகும் இதற்கு தற்காலிகமாக ‘சூரி 7’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் தொடக்க விழா சென்னையில் நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் கிளாப் போர்டு அடிக்க, ‘மண்டாடி’ படத்தின் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் கேமராவை இயக்கி படப்பிடிப்பைத் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் இயக்குநர்கள் வெற்றிமாறன், மதிமாறன், கீர்த்தீஸ்வரன், ஏ.ஆர்.கே. சரவணன், நலன் குமாரசாமி, மித்ரன், ராம்குமார் மற்றும் தயாரிப்பாளர் அருண் விஸ்வா உள்ளிட்ட திரையுலகினர் கலந்துகொண்டனர்.