நடிகை நிமிஷா சஜயன், நடிகர் கருணாஸ் நடித்துள்ள ‘என்ன விலை’ திரைப்படம் துருக்கி சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது.
கலமாயா சினிவெர்ஸ், ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் சஜீவ் பழூர் இயக்கத்தில் ‘என்ன விலை’ திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் நடிகை நிமிஷா சஜயன், நடிகர் கருணாஸ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். ஒய்.ஜி. மகேந்திரன், பூர்ணிமா பாக்யராஜ், மோகன்ராம், லொள்ளு சபா சுவாமிநாதன், கவிதாலயா கிருஷ்ணா, தீபா சங்கர், மொட்டை ராஜேந்திரன், நக்கலைட்ஸ் கவி மற்றும் பலரும் நடித்திருக்கின்றனர். சிறுவர், சிறுமிகளும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
சமூக-அரசியல் பின்னணியுடன் கூடிய குடும்ப திரில்லர் கதையாக உருவாகியுள்ள இப்படத்தை கலாமயா பிலிம்ஸ் சார்பில் கிதேஷ் வி தயாரித்துள்ளார். ராமேஸ்வரம், சென்னை, பாண்டிச்சேரி மற்றும் கொச்சி உள்ளிட்ட 56 இடங்களில் மூன்று ஷெட்யூல்களில் படமாக்கப்பட்டுள்ளது.
கேரளத்தைச் சேர்ந்த திரைக்கதை ஆசிரியர் சஜீவ் பழூர் முதல்முறையாக இயக்குநராக அறிமுகமாகுகிறார். இவரது தொண்டி முதலும் திருக்ஷாக்ஷியும் படம் தேசிய விருது வென்றது குறிப்பிடத்தக்கது.
சஜீவ் பழூர் ‘என்ன விலை’ படத்தை ஏற்கெனவே பல திரைப்பட விழாவிற்கு அனுப்பியுள்ளார். அதில் நான்கு விருதுகள் வென்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இப்படம் தாதா சாகேப் பால்கே திரைப்பட விழாவில் சிறந்த திரைக்கதைக்கான விருதை பெற்றுள்ளது.
இந்நிலையில், துருக்கியில் நடைபெறும் கையா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட ‘என்ன விலை’ படம் தேர்வாகியுள்ளது. இந்தப் படம் செப்டம்பரில் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.