சினிமா செய்திகள்

விஜய்யை அவமதிக்கும் நோக்கம் இல்லை - நடிகர் நட்டி விளக்கம்

தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா இயக்கத்தில் நட்டி நட்ராஜ் நடித்துள்ள ‘டிஎன் 2026’ திரைப்படம் வரும் 10-ம் தேதி வெளியாகிறது.

சென்னை,

சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் இருவாரமே உள்ள நிலையில், அரசியலை மையப்படுத்தி நகைச்சுவையாக ‘டிஎன் 2026’ என்ற படம் உருவாகியுள்ளது. நடிகர் விஜய்யின் அரசியலை கலாய்க்கும் விதமாக இந்த பாடத்தில் காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக விஜய் ரசிகர்கள் மத்தியில் கடும் விமர்சனங்கள் கிளம்பியுள்ளன.

‘டிஎன் 2026’ பட டீசரில் விஜய்யை விமர்சிக்கும் விதமாக காட்சிகள் இருப்பதாக ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன் ஆகியோர் கடுமையாக விமர்சித்து இருந்தனர்.

‘டிஎன் 2026’ படத்தில் நட்டியின் கதாபாத்திரம் தவெக தலைவர் விஜய்யை பிரதிபலிப்பது போலவே இருந்தது. இதனை தவெக தொண்டர்கள் கண்டித்து படக்குழுவினரை விமர்சித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றன.

தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா இயக்கத்தில் நட்டி என்கிற நட்ராஜ் நடித்துள்ள படம் ‘டிஎன் 2026’. கண்ணன் ரவி குரூப்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் தம்பி ராமையா, எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு, ஷ்ரிதா ராவ், சாந்தினி தமிழரசன், யாஷிகா ஆனந்த், ரெடின் கின்ஸ்லி உள்ளிட்ட இன்னும் பலர் நடித்துள்ளனர். தர்புகா சிவா இசையமைத்துள்ள இப்படம் அரசியல் திரில்லர் படமாக உருவாகியுள்ளது. இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்தது. இப்படம் வரும் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில், ‘டிஎன் 2026’ படத்தின் கதாநாயகன் நட்டி, இந்த படம் யாரையும் குறிவைத்து எடுக்கப்படவில்லை என விளக்கம் கொடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “இந்த படத்தில் நான் இரண்டு தேசிய விருது பெற்ற நடிகர்களுடன் நடித்திருக்கிறேன். தம்பி ராமையா அண்ணா மற்றும் எம்.எஸ். பாஸ்கர் சார் இருவரிடமிருந்தும் நான் நிறைய கற்றுக்கொண்டேன். இயக்குநர் உமாபதி வேலை செய்யும் விதம் மிகவும் வித்தியாசமானது. இப்படம் அரசியலை ஒரு புதிய கோணத்தில் சொல்லுகிறது.

இந்த படம் யாரையும் குறிவைத்து எடுக்கப்படவில்லை. அந்த நடிகரின் லுக் வருகிறதென்றால் அது ஒரு போர்ஷன் மட்டும் தான். அதைத் தவிர்த்து ஐந்து முதல் ஆறு வித்தியாசமான கெட்டப்புகளில் எடுத்திருக்கிறோம். உமாபதி சொன்னது போல் அந்த நடிகர் சிங்கம். அவரை பக்கத்தில் இருந்து பார்த்திருக்கிறேன். அவரை அவமதிக்கும் எண்ணம் எனக்கும் எங்கள் படக்குழுவிற்கும் இல்லை. படம் பார்த்தால் உங்களுக்கு புரியும். இது முழுக்க முழுக்க ஒரு பொழுதுபோக்கு படம். முதல் பிரேமிலிருந்து கடைசி பிரேம் வரை நீங்கள் சிரித்து மகிழ்வீர்கள். அதனால் தயவு செய்து வேறு கோணத்தில் பார்க்காமல், ஒரு நல்ல படமாக பார்த்து ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

‘டிஎன் 2026’ படத்தின் இயக்குநர் உமாபதி ராமையா, தம்பி ராமையா ஆகியோரும் படம் குறித்து விளக்கமளித்துள்ளனர் .