கோப்புப்படம் 
சினிமா செய்திகள்

தமிழ் கிராமங்களின் காதலை உங்களைப் போல யாரும் திரையில் காட்டவில்லை - பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரகுமான் புகழஞ்சலி

இயக்குநர் பாரதிராஜா மறைவுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் இரங்கல் தெரிவித்துள்ளார்.

சென்னை,

இயக்குநர் பாரதிராஜா (84 வயது) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் இன்று காலமானார். கடந்த ஆண்டு மார்ச் மாதம் அவரது மகன் மனோஜ் மறைந்த நிலையில், அத்துயரிலிருந்து மீளாத பாரதிராஜா, உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

வீட்டில் இருந்தபடியே மருத்துவர்கள் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி சென்னை நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் இயக்குநர் பாரதிராஜா இன்று அதிகாலையில் காலமானார்.

1977-ம் ஆண்டு வெளியான 16 வயதினிலே திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பாரதிராஜா, கிராமிய பின்னணியில் பல வெற்றிப் படங்களை உருவாக்கி, தமிழ்த் திரையுலகில் தனக்கென தனித்த அடையாளத்தை உருவாக்கியவர். அவரது மறைவு ரசிகர்கள் மற்றும் திரையுலகத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் பாரதிராஜாவின் மறைவுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "தமிழ் கிராமங்களின் காதலையும், உயிரோட்டத்தையும் உங்களைப் போல யாரும் திரையில் காட்டவில்லை. உங்கள் படைப்புகள் தலைமுறைகளைத் தாண்டி பலருக்கு ஊக்கமளித்துக் கொண்டே இருக்கும்.

என் இசையை தென்னிந்தியாவின் மிகத் தொலைதூர கிராமங்களுக்குக் கொண்டு சென்றதற்கும், அந்த மக்களின் வாழ்க்கைக் கதைகளை உலகிற்கு அறிமுகப்படுத்தியதற்கும் நன்றி. அமைதியாக இளைப்பாறுங்கள், பாரதிராஜா அவர்களே" என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT