சென்னை,
பிரபல இயக்குநர் சீனு ராமசாமி, விஜய் சேதுபதிக்கு ஆதராவாக தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், விஜய் சேதுபதியை உள்ளும் புறமும் நன்கறிவேன். எதையும் நேர்பட கண்கள் பார்த்து சொல்லக் கூடிய மனிதன்; மறைந்திருந்து தாக்கும் குணம் கொண்ட மனிதன் அல்ல. என பதிவிட்டுள்ளார்.
பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி இரண்டாவது வாரத்தை எட்டியுள்ளது. இம்முறை சட்டப் பேரவையை மையமாகக் கொண்டு நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இதற்காக ஜனநாயக அறை ஒன்றும் திறக்கப்பட்டுள்ளது. அதில் ஆளும் அணி ஒரு பிரிவாகவும், எதிர் அணி மற்றொரு பிரிவாகவும் செயல்படுகிறது. ஆளும் அணியினர் செய்யும் தவறுகளை எதிர் அணியினர் சுட்டிக்காட்ட வேண்டும். போட்டியின் சுவாரசியத்தைக் கூட்டும் வகையில் நிகழ்ச்சி இவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாரத்தின் இறுதியிலும் போட்டியாளர்களுடன் விஜய் சேதுபதி கலந்துரையாடுவார். நிகழ்ச்சி மற்றும் போட்டியாளர்களிடையே உள்ள நிறை, குறைகளை சுட்டிக்காட்டுவார்.
தலைமைத்துவம் குறித்து அறிவுரை வழங்கிய விஜய் சேதுபதி “தலைமைப் பண்பு என்றால் என்னவென்று தெரியாமல்... வாய்க்கு வந்தபடி வாக்குறுதிகளை அள்ளிக் கொடுத்துவிட்டு, பிரச்சினைகளும் பொறுப்புகளும் வரும்போது எதிரணி மேல் பழியைப் போட்டுவிட்டு அங்கிருந்து தெறித்து ஓடுவது தலைவருக்கான தகுதி இல்லை” என பேசியிருந்தார்.
தலைமைப் பண்பு குறித்து நடிகர் விஜய் சேதுபதி பேசிய வீடியோ பலரால் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவிய நிலையில், இவர் முதல்-அமைச்சர் விஜய்யைதான் தாக்கி பேசியுள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். இதனை பார்த்து கடுப்பான விர்ச்சுவல் வாரியர்ஸ், விஜய் சேதுபதி மீது முன்பு எழுந்த குற்றச்சாட்டுகளை எல்லாம் லிஸ்ட் போட்டு ட்ரோல் செய்ய ஆரம்பித்துள்ளனர்.
விஜய் சேதுபதியின் இந்த கருத்து சமூக வலைத்தளங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சிலர் விஜய் சேதுபதியை விமர்சித்தும், ஒரு சிலர் அவருக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், பிரபல இயக்குநர் சீனு ராமசாமி, விஜய் சேதுபதிக்கு ஆதராவாக தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது,
"அனைவருக்கும் அன்பான வணக்கம். விஜய் சேதுபதியை உள்ளும் புறமும் நன்கறிவேன். எதையும் நேர்பட கண்கள் பார்த்து சொல்லக் கூடிய மனிதன்; மறைந்திருந்து தாக்கும் குணம் கொண்ட மனிதன் அல்ல. உண்மையில் தமிழக சட்டசபை நிகழ்ச்சிகளை மக்கள் அதிகமாக பார்க்கிறார்கள். மற்ற ஓடிடி, சினிமா, இணையதள செயல்பாடுகள் எல்லாம் சட்டசபை காலங்களிலே மந்தமாகிவிட்டது, இதுதான் உண்மை.
பிக்பாஸ் நிகழ்ச்சியை கொஞ்சம் அரசியல் சாயம் பூசி விட்டால் மக்களின் கவனத்தை பெற்று விடலாம் என்று அதை நடத்துபவர்கள் நினைத்திருக்கலாம். ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சியில் சொல்லப்படும் ஒரு வசனத்தை எடுத்துக் கொண்டு இவ்வளவு சீரியஸாக ரியாக்ட் பண்ண வேண்டிய அவசியம் இல்லை என்று நான் நினைக்கிறேன். அதை வைத்து அவரைத் தனிப்பட்ட முறையில் தாக்குவது என்பது மிகவும் வருத்தமாக இருக்கிறது.
இன்று இந்தியா முழுக்க நன்கறிந்த பெருமைக்குரிய கலைஞன் சேது. புதியவர்களை ஊக்கப்படுத்த பல படங்களில் கெஸ்ட் ரோல் நடித்தவர், தனக்குப் பிடித்த பெரிய நடிகர்களின் படங்களிலே இமேஜ் பார்க்காமல் வில்லனாகவும் நடித்தவர், நிறைய புதிய இயக்குனர்களோடு பயணித்தவர், 100 மூத்த திரைத் தொழிலாளர்களுக்கு 100 சவரன் தங்கம் தந்தவர், பல படங்கள் சிக்கலில் இருந்தபோது தன் சம்பளத்தை விட்டுக்கொடுத்து உதவியவர்.
முன்பின் தெரியாத பலருக்கும் நன்மைகள் செய்த மனிதன் விஜய் சேதுபதி. ஆகவே அவசரப்பட்டு தனிப்பட்ட முறையில் அவரை யாரும் தாக்க வேண்டாம் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்."
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.