மும்பை,
தொடர்ந்து ஆக்ஷன், திரில்லர் மற்றும் அழுத்தமான கதைக்களம் கொண்ட படங்களில் நடித்து வரும் டாப்ஸி பன்னு, தற்போது ரொமாண்டிக் காமெடி படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.
தமிழில் வெளிவந்த 'ஆடுகளம்' படத்தின் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் டாப்ஸி பன்னு. அதனை தொடர்ந்து 'ஆரம்பம்', 'காஞ்சனா 2', 'வை ராஜா வை', 'கேம் ஓவர்' உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் இந்தியிலும் பல படங்களில் நடித்து வருகிறார். சமீப காலமாக இந்தி படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
இவரது நடிப்பில் நேற்று 'காந்தாரி' என்ற திரில்லர் படம் வெளியாகி உள்ளது. கற்பனையான ஜெய்புரா என்ற நகரத்தை பின்னணியாகக் கொண்ட இப்படத்தில், பானி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தேவாஷிஷ் மக்கிஜா இப்படத்தை இயக்கியுள்ளார்.
‘பிங்க்’, ‘பத்லா’, ‘தப்பாட்’, ‘நாம் ஷபானா’ உள்ளிட்ட பாலிவுட் படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் நடிகை டாப்ஸி பன்னு. தொடர்ந்து ஆக்ஷன், திரில்லர் மற்றும் அழுத்தமான கதைக்களம் கொண்ட படங்களில் நடித்து வரும் அவர், தற்போது ரொமாண்டிக் காமெடி படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.
தனது திரைப்பயணம் குறித்து பேசிய டாப்ஸி, “எனக்கு கொஞ்சம் லைட்டான கதாபாத்திரத்தை கொடுங்கள். ரொமாண்டிக் காமெடி படத்தில் நடிக்க எனக்கும் ஆசை இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட வகையான கதாபாத்திரத்தில் நடிகர் ஒருவர் சிறப்பாக நடித்து விட்டால், அதே மாதிரியான கதாபாத்திரங்களிலேயே அவர்களை தொடர்ந்து நடிக்க வைக்கும் போக்கு திரையுலகில் இருக்கிறது. ஒரு நடிகரை குறிப்பிட்ட சில கதாபாத்திரங்களுக்குள் மட்டுமே அடைத்து விடுவது திரையுலகின் படைப்பாற்றல் பற்றாக்குறையைக் காட்டுகிறது ” என தெரிவித்துள்ளார்.
தன்னை காதல் கதாநாயகியாக கற்பனை செய்வதே பலருக்கு கடினமாக இருப்பதாக கூறிய டாப்ஸி, ‘மன்மர்ஸியான்’ திரைப்படத்தை இதற்கு உதாரணமாக குறிப்பிட்டுள்ளார். மேலும், ‘கேல் கேல் மெய்ன்’ படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்தது தனக்கு மகிழ்ச்சியாக இருந்ததாகவும், இதுபோன்ற மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடிக்க தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.