சினிமா செய்திகள்

6 மணி காட்சிக்கு ஆதரவு இல்லை! - தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கும் சீமான்

தயாரிப்பாளர்கள் சங்கம் விளக்கம் அளித்து கடிதத்திற்கு பதிலளிக்கும் விதமாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சென்னை,

பண்டிகை நாட்களிலும் விடுமுறைக் காலங்களிலும் கூடுதல் காட்சிகள் திரையிடப்பட்டு வந்த நிலையில், ஒவ்வொரு புதிய திரைப்படத்தின் வெளியீட்டிற்கும் அதிகாலை 6 மணி முதல் ஆறு காட்சிகள் என்பது தேவையா என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதிகாலை காட்சிக்கு அனுமதி

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு திரையரங்கு மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கம் ஆகிய அமைப்புகளின் கோரிக்கை படி , தமிழ்நாட்டில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் புதிதாக வெளியிடப்படும் தமிழ் திரைப்படங்கள், வெளியிடப்படும் நாளில் இருந்து ஒரு வாரத்துக்கு தினசரி 6 காட்சிகளுக்கு மிகாமல் காலை 6 மணியில் இருந்து மறுநாள் அதிகாலை 2.30 மணி வரை திரையிடவும் உள்ளூர் பண்டிகை நாட்கள், பொது விடுமுறை நாட்கள், சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தினசரி 6 காட்சிகள் திரையிடவும் முதல்-அமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

அரசு அனுமதி அளித்தது வெட்கக்கேடானது - சீமான்

புதிய திரைப்படங்களுக்கு ஒரு நாளில் அதிகாலை 6 மணி முதல் ஆறு காட்சிகளுக்கு அரசு அனுமதி அளித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. மக்களை அறிவிலும், ஆற்றலிலும் சிறந்தவர்களாக உருவாக்க வேண்டிய அரசு, அதிகாலையிலேயே அவர்களை திரையரங்குகளுக்கு அழைப்பதை சாதனையாகக் கருதுவது வெட்கக்கேடு என்று சீமான் பேசியிருந்தார். அரசு அதிகாலை மணி காட்சிகளுக்கு அனுமதி வழங்கியது குறித்த சீமானின் பேச்சு தயாரிப்பாளர்கள் சங்கம் விளக்கம் அளித்து நேற்று கடிதம் அனுப்பியிருந்தது.

சீமானின் பதில் பதிவு

தற்போது, தயாரிப்பாளர்கள் சங்கம் விளக்கம் அளித்து கடிதத்திற்கு பதிலளிக்கும் விதமாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

அன்பிற்கினிய தமிழ்த் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் அண்ணன் சிவா மற்றும் ஐயா தனஞ்செயன் அவர்களுக்கு,

வணக்கம்!

புதிய திரைப்படங்களுக்கு முதல் வாரத்தில் அதிகாலை 6 மணி முதல் காட்சிகள் திரையிட அனுமதி வழங்கப்பட்டது தொடர்பாகத் தாங்கள் எழுதிய கடிதத்தைப் படித்தேன்.

வெளிமாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் தமிழ்த் திரைப்படங்கள் முன்னதாகவே வெளியாகும்போது, அவற்றைப் பற்றிய எதிர்மறைக் கருத்துகள் பரப்பப்படுவதால் ஏற்படும் பாதிப்புகளைத் தங்கள் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளீர்கள். திரைப்பட உருவாக்கத்தின் பின்னாலுள்ள உழைப்பையும், தயாரிப்பாளர்கள் எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடிகளையும் திரைத்துறையைச் சேர்ந்தவனாக நானும் அறிவேன். தமிழ்த் திரையுலகம் நலிவடைய வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஒருபோதும் இருந்ததில்லை; அது வளர வேண்டும் என்பதே எனது விருப்பமும். நாங்கள் அரசமைத்தால், ‘திரைக்கலை மேம்பாடு’ என்பதன் கீழ் தமிழ்த் திரையுலகம் மேம்படப் பல திட்டங்களையும் ஒழுங்குமுறைகளையும் கொண்டுவர விரும்பி தமிழில், தமிழ் மொழி, பண்பாடு மேம்பாட்டிற்குப் பங்களிக்கும் திரைப்படங்களுக்கு அரசு பொருளாதார உதவி வழங்குவதோடு, சிறந்த திரைப்படங்களை அரசே வாங்கி வெளியிடுவது; திரைப்படங்களை இணையத்தில் அத்துமீறி வெளியிடுவோருக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுப்பது; திரையரங்குக் கட்டணம், ஊர்தி நிறுத்தக் கட்டணம், உணவுப்பொருட்களின் விலையை முறைப்படுத்துவது உள்ளிட்ட திட்டங்களை எங்களது ஆட்சிச் செயற்பாட்டு வரைவில் முன்வைத்திருக்கிறோம்.

சமூகத்தின் மீதும், மக்களின் மீதும், எதிர்காலத் தலைமுறையின் மீதும் கொண்டுள்ள ஆழமான பற்றுதலும் அக்கறையுமே எனது எதிர்ப்பிற்குக் காரணம் என்பதைத் தாங்கள் புரிந்துகொள்ள வேண்டும். திரைப்படம் மகிழ்ச்சியையும் சிந்தனையையும் தரும் ஓர் உயர்ந்த கலை. அந்தக் கலையின் மீது எனக்கிருக்கும் நேசத்திற்கு இணையாக, அதைக் காணும் மக்களின் கல்வி, உழைப்பு, வாழ்வாதாரம், சமூகப் பொறுப்பு ஆகியவற்றின் மீதும் எனக்கு அக்கறை இருக்கிறது.

பண்டிகை நாட்களிலும் விடுமுறைக் காலங்களிலும் கூடுதல் காட்சிகள் திரையிடப்பட்டு வந்த நிலையில், ஒவ்வொரு புதிய திரைப்படத்தின் வெளியீட்டிற்கும் அதிகாலை 6 மணி முதல் ஆறு காட்சிகள் என்பது தேவையா என்ற கேள்வியைத்தான் முன்வைத்தேன்.

வாரந்தோறும் புதிய திரைப்படங்கள் வெளியாகிக் கொண்டே இருக்கும் போது அவற்றை அதிகாலையிலேயே காண்பதற்கு ஆண்டின் எல்லா நாட்களிலும் நம் வீட்டு இளந்தலைமுறைப் பிள்ளைகள் திரையரங்க வாயில்களில் காத்திருப்பதையும் அன்றாடப் பணிகளில் இருந்து விலகி கேளிக்கைகளில் திளைத்திருப்பதையும் எண்ணிப் பார்க்கவே மனம் வலிக்கிறது. இதுபோன்ற மிதமிஞ்சிய கேளிக்கைகளில் ஈடுபட மக்களைத் தொடர்ந்து ஊக்குவிப்பது எத்தகைய சமூகச் சூழலை உருவாக்கும் என்பதே என் பெருங்கவலை.

அறிவார்ந்த சமூகத்தைக் கட்டமைக்க வேண்டிய அரசின் முன்னுரிமைகள் குறித்தே எனது அறிக்கையில் கேள்வி எழுப்பினேன். ஆகவே, தங்கள் கோரிக்கையின் நோக்கத்தை அறியாமல் நான் கருத்துத் தெரிவித்ததாகக் கருத வேண்டாம். திரைத்துறையின் தேவையை மட்டும் தாங்கள் முன்வைப்பதுபோல, ஒட்டுமொத்தச் சமூகத்தின் நலனை முன்னிறுத்தி எனது கருத்தை முன்வைத்தேன்.

காலை 6 மணிக் காட்சிக்கு ஆதரவாகத் தாங்கள் கூறியுள்ள காரணங்களை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாவிட்டாலும், தங்கள் கோரிக்கையை முதலமைச்சர் ஏற்றுக்கொண்டு அனுமதி வழங்கியிருப்பதாகத் தெரிவித்துள்ளதால், இதுகுறித்து மேலும் ஏதும் கருத்துச் சொல்லாமல் மௌனமாகிறேன்.

தமிழ்த் திரையுலகமும், அதனை வாழவைக்கும் தமிழ் மக்களும் நலமுடன் வாழ வேண்டும் என்பதே எனது விருப்பம்!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT