சென்னை,
ஹாலிவுட்டின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் கடந்த 17-ந் தேதி வெளியான திரைப்படம் ‘தி ஒடிஸி’. கிரேக்க இலக்கியத்தின் புகழ்பெற்ற காவியமான ‘ஒடிசி’யை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இப்படம், டிரோஜன் போரில் பங்கேற்ற மன்னன் ஒடிசியஸ் தனது நாட்டுக்கு திரும்பும் பயணத்தில் எதிர்கொள்ளும் சவால்களை கதைக்களமாக கொண்டுள்ளது.
சுமார் 250 மில்லியன் அமெரிக்க டாலர், அதாவது இந்திய மதிப்பில் ரூ.2,500 கோடி பட்ஜெட்டில் இப்படம் உருவாகியுள்ளது. இதில் டாம் ஹாலண்ட், ஆன் ஹாத்வே, ஜெண்டயா உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான ‘தி ஒடிஸி’, முதல் ஒரு வாரத்திலேயே சுமார் 364 மில்லியன் அமெரிக்க டாலர், அதாவது ரூ.3,500 கோடிக்கு மேல் வசூலித்தது. தொடர்ந்து உலகம் முழுவதும் அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிவரும் இப்படம், தற்போது 1 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.9,500 கோடி) வசூலை கடந்து சாதனை படைத்துள்ளது.
இதன்மூலம் கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய ‘தி டார்க் நைட்’, ‘தி டார்க் நைட் ரைசஸ்’ ஆகிய படங்களை தொடர்ந்து, அவரது மற்றொரு திரைப்படமான ‘தி ஒடிஸி’யும் 1 பில்லியன் டாலர் வசூல் கிளப்பில் இணைந்துள்ளது.
இந்நிலையில், இந்திய திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக திகழ்ந்து வரும் அட்லீ, சமீபத்தில் நோலனின் ‘தி ஒடிசி’ திரைப்படத்தை திரையரங்கில் பார்த்த அனுபவம் குறித்து ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது;-
“நோலனின் ‘தி ஒடிசி’ திரைப்படம் சினிமா அனுபவத்தையும் தாண்டிய ஒரு உணர்வு. சில படங்களை நாம் வெறும் பார்வையாளர்களாகப் பார்க்கிறோம். சில படங்களை நாம் ரசிக்கிறோம். ஆனால் மிக அரிதாக, சில படங்கள் நம்மை முற்றிலும் வேறொரு உலகத்திற்கே அழைத்துச் செல்கின்றன. 'தி ஒடிசி' எனக்கு அத்தகைய அனுபவத்தைத் தந்தது.
நோலன் அவர்களின் கதை சொல்லும் விதம் வியக்கத்தக்கது. படத்தின் காட்சிகள் தனக்கென ஒரு மொழியைக் கொண்டுள்ளன; கேமரா ஒரு கதாபாத்திரத்தைப் போலவே கதையை விவரிக்கிறது; இசையமைப்பாளர் லுட்விக்கின் இசை வெறும் பின்னணியாக மட்டுமல்லாமல், நம் நாடித் துடிப்போடு ஒன்றிவிடுகிறது.
திரையரங்கிற்குள் அமர்ந்திருக்கும்போது மிக அரிதாகவே உணரக்கூடிய ஒருவித விறுவிறுப்பும், நம்மை முழுமையாக ஆட்கொள்ளும் ஈர்ப்பு சக்தியும் இந்த படத்தில் உள்ளன. ஆனால், எனக்குள் ஆழமாகப் பதிந்தது மிகவும் தனிப்பட்ட ஒரு உணர்வு - ஒரு பார்வையாளராக நாம் அப்படத்திடம் நம்மை முழுமையாக ஒப்படைக்கும்போது, அதுவே ஒரு உண்மையான காவியமாக மாறுகிறது. 'தி ஒடிசி' எனக்கு அத்தகையதொரு காவியமாகவே அமைந்தது.
இதை ஐமேக்ஸ் திரையரங்கில் அனுபவியுங்கள். படம் உங்களை சூழ்ந்துகொள்ளட்டும். இப்படம் உங்களை முழுமையாக ஆட்கொள்ளட்டும்; உங்களை வேறொரு உலகத்திற்கு அழைத்துச் செல்லட்டும். சில திரைப்படங்கள் வெறும் பார்வைக்காக உருவாக்கப்படுகின்றன. சில திரைப்படங்கள்தான் வாழ்ந்து உணர்வதற்காக உருவாக்கப்படுகின்றன.”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.