சினிமா செய்திகள்

சமூக வலைதளங்களில் ஆபாச கருத்துகள்: நடிகை ஈஷா ரெப்பா போலீசில் புகார்

சமூக வலைதளங்களில் தன்னை பற்றிய ஆபாச, அவதூறு கருத்துகள் வெளியிடப்பட்டதாக கூறி நடிகை ஈஷா ரெப்பா பஞ்சாரா ஹில்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக இருப்பவர் ஈஷா ரெப்பா. இவர் தமிழில் 'ஓய்', 'ரெண்டகம்', நித்தம் ஒரு வானம்' போன்ற படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் சமீபத்தில் 'ஓம் சாந்தி சாந்தி சாந்தி' என்ற படம் வெளியானது. இந்த படத்தை தருண் பாஸ்கர் இயக்கி நடித்துள்ளார்.

இதற்கிடையில் சமூக வலைதளங்களில் தன்னை பற்றிய ஆபாச, அவதூறு கருத்துகள் வெளியிடப்பட்டதாக கூறி, ஐதராபாத்தில் உள்ள பஞ்சாரா ஹில்ஸ் காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரில், "புதிய படத்துக்கான பட விழாக்களில் நான் கலந்துகொண்ட புகைப்படங்கள் மற்றும் பேச்சுகளை அவதூறாக திரித்து சிலர் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். மேலும் அருவருக்கத்தக்க மற்றும் ஆபாசமாகவும் அதில் கருத்துகளை பதிவிட்டுள்ளனர். இது எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்' , என்று குறிப்பிட்டுள்ளார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.