சினிமா செய்திகள்

தோல்விகளால் மனம் தளரக்கூடாது- ஹிருத்திக் ரோஷன்

வெற்றியைப் போலவே தோல்வியையும் இயல்பாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ஹிருத்திக் ரோஷன் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஹிருத்திக் ரோஷன், தனது நடனத் திறமையாலும், நடிப்பாலும் இந்தியா முழுவதும் ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளார். தென்னிந்தியாவிலும் அவருக்கு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.

தோல்வியை சகஜமாக ஏற்றுக்கொள்ள வேண்டும்

சமீபத்தில் ஹிருத்திக் ரோஷன் பேசிய கருத்துகள் கவனம் பெற்றுள்ளன. அதில், "பொதுவாக பிரபலங்களுக்கு வெற்றியும் தோல்வியும் சகஜமானவை. வெற்றி கிடைக்கும்போது மகிழ்ச்சியடையும் நாம், தோல்வி வரும்போது துவண்டு போகிறோம். ஆனால் அப்படி இருக்கக் கூடாது. வெற்றியைப் போலவே தோல்வியையும் இயல்பாக ஏற்றுக்கொள்ள வேண்டும்" என்று தெரிவித்தார்.

விமர்சனங்கள் என்னை பாதிக்கவில்லை

மேலும், "என்னைப் பற்றி மிகவும் கடுமையான விமர்சனங்களும் வந்துள்ளன. ஆனாலும் நான் மனம் தளரவில்லை. தோல்வியை வெற்றிக்கான உத்வேகமாக எடுத்துக்கொள்ள வேண்டும். உளியால் அடிபடாத கற்கள் சிலையாகாது. அதுபோல தோல்வியை சந்திக்காமல் வெற்றியையும் அடைய முடியாது" என ஹிருத்திக் ரோஷன் கூறினார்.

'கிரிஷ்-4' குறித்து எதிர்பார்ப்பு

இதற்கிடையில், 'கிரிஷ்-4' திரைப்படத்தை ஹிருத்திக் ரோஷன் இயக்கி, அதில் நாயகனாகவும் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.