சென்னை,
கார்த்திக் சுப்புராஜின் ‘ஸ்டோன் பெஞ்ச்’ தயாரிப்பு நிறுவனமும், ராணா டகுபதியின்‘ஸ்பிரிட் மீடியா’ தயாரிப்பு நிறுவனமும் முதல்முறையாக ஒன்றாக இணைந்து ‘நீளிரா’ என்ற படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்தை இலங்கைத் தமிழர் சோமிதரண் இயக்கியுள்ளார். இதில் நவீன் சந்திரா, விது ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சிவா பத்மயன் இசையமைத்துள்ளார்.
இலங்கையில் போர் பதற்றமான சூழ்நிலைக்கு நடுவே ஒரு திருமணம் நடைபெறுகிறது. அதில் எந்த மாதிரியான பிரச்சினைகள் ஏற்படுகிறது என்பதே படத்தின் உணர்ச்சிப்பூர்வமான பின்னணி. இந்த படம் விமர்சனம் ரீதியாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தாலும், வணிக ரீதியில் பின்தங்கி உள்ளது.
இந்த நிலையில், இந்த படத்தின் தயாரிப்பாளரான கார்த்திக் சுப்பராஜ் இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், "என் அன்பான தமிழ் ரசிகர்களே, நீளிரா திரைப்படம் ஏப்ரல் 3ஆம் தேதி வெளியானது. வெளியான நாளிலிருந்தே இந்த படம், இதைக் கண்டு களித்த ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் மிகவும் அபாரமான வரவேற்பைப் பெற்றுள்ளது.
சோமீதரன் என்கிற ஈழத்து படைப்பாளியின் முதல் படமான நீளிரா, இந்திய சினிமா வரலாற்றில் முதன்முறையாக உருவாகியுள்ள ஈழத் தமிழ் திரைப்படம் என்பதால், இதை ஒரு மெயின்ஸ்ட்ரீம் திரையரங்கு வெளியீடாக கொண்டு வர பல சவால்களை எதிர்கொண்டோம். அந்த சவால்களை கடந்து நாங்கள் அதை சாதித்துள்ளோம். உணர்வு ரீதியாக எங்களுக்கு இது மிகப்பெரிய வெற்றி படம்...
கோடிக்கோடியாக லாபம் வரும் என்ற நோக்கத்துடன் இந்த படத்தை நாங்கள் தயாரிக்கவில்லை. ஈழத்து போரை சார்ந்த உண்மையான கதைகளையும், படைப்புகளையும், படைப்பாளிகளையும் உலக சினிமா அரங்குகளில் அவர்களின் குரல் கேட்கும் வகையில் ஒரு இடம் உருவாக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.
இது ஒரு தொடக்கம்.! ஆனால் இந்த தொடக்கம் வளர்ந்து, இனி வரும் காலங்களில் இதைப் போன்ற கதைகளும் படைப்பாளிகளும் சினிமாவிற்கு வர வேண்டும் என்றால், வியாபார ரீதியாக திரையரங்குகளுக்கு ஒரு சிறிய நம்பிக்கையை கொடுக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது.
தொடக்கத்தில் குறைந்த திரைகளில்தான் வெளியிட்டோம். குறைந்த திரைகளே கிடைத்தது. புனித வெள்ளியில் தொடங்கி, வாய்மொழி பாராட்டு (Word of Mouth) பரவி, மேலும் பலரும் திரையரங்குகளுக்கு வந்து, ஞாயிற்றுக்கிழமை -ஈஸ்டர் நாளில் -மக்கள் ஆதரவால் எங்கள் படம் உயிர்த்தெழும் என்று உறுதியாக நம்பினோம்.
ஆனால் ஈழத் தமிழ் சினிமாவுக்கான ஈஸ்டர் இன்னும் வரவில்லை... பல வருடங்களாக சிலுவையில் அறையப்பட்டிருக்கும் ஈழத் தமிழ் சினிமாவை உயிர்த்தெழச் செய்ய உங்களால் மட்டுமே முடியும்...
தயவுசெய்து எங்கள் திரைப்படத்தை திரையரங்குகளில் சென்று பாருங்கள். அது உங்கள் நேரத்திற்கும் பணத்திற்கும் நிச்சயமாக மதிப்புடையதாக இருக்கும்.
குறிப்பு: இந்த படத்திற்கான ஓடிடி ஒப்பந்தம் இன்னும் முடிவாகவில்லை. எனவே சில வாரங்களில் ஓடிடி-யில் பார்க்கலாம் என்று நினைக்க வேண்டாம்.
சினிமாவின் உயிர்த்தெழுதல் திரையரங்குகளில்தான் நிகழும்!" என்று பதிவிட்டுள்ளார்.