சினிமா செய்திகள்

தெருக்கூத்துக் கலைஞர்களின் வாழ்வியலைப் பேசும் ‘ஊர் கூடும் இரவு’ ஆவணப்படம்

சென்னையைச் சேர்ந்த புகைப்படக் கலைஞரும் ஆவணப்பட இயக்குநருமான ரம்யா ஸ்ரீராம் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

சென்னை,

தமிழகத்தின் பாரம்பரிய நாட்டுப்புறக் கலையான தெருக்கூத்தையும், அக்கலையில் ஈடுபடும் கலைஞர்களின் வாழ்வியலையும் பதிவு செய்யும் வகையில் ‘ஊர் கூடும் இரவு’ என்ற ஆவணப்படம் உருவாகியுள்ளது.

இயக்குநர் ரம்யா ஸ்ரீராம்

சென்னையைச் சேர்ந்த புகைப்படக் கலைஞரும் ஆவணப்பட இயக்குநருமான ரம்யா ஸ்ரீராம், மக்களின் பாரம்பரியச் சடங்குகள், விழாக்கள் மற்றும் கிராமியக் கலாச்சாரங்களை ஆவணப்படங்களாக உருவாக்கி வருகிறார். அந்த வகையில், மயானக் கொள்ளை, குலசை தசரா உள்ளிட்ட நிகழ்வுகளை ஆவணப்படமாகப் பதிவு செய்துள்ள இவர், தற்போது தெருக்கூத்துக் கலைஞர்களின் வாழ்வியலை மையமாகக் கொண்டு ‘ஊர் கூடும் இரவு’ என்ற ஆவணப்படத்தை இயக்கியுள்ளார்.

கலைஞர்களின் அர்ப்பணிப்பைப் பதிவு செய்யும் படைப்பு

தெருக்கூத்துக் கலைஞர்களின் துயரங்களை மட்டுமின்றி, அவர்களின் கலைத்திறன், அர்ப்பணிப்பு மற்றும் பாரம்பரியக் கலையின் சிறப்பையும் இந்த ஆவணப்படம் எடுத்துரைக்கிறது. இரவு நேரங்களில் நடைபெறும் தெருக்கூத்து நிகழ்ச்சிகளையும், அவற்றைக் காண ஊரே ஒன்றுகூடும் பண்பாட்டையும் இப்படம் பதிவு செய்துள்ளது.

பள்ளி மாணவர்களுக்குச் சிறப்புத் திரையிடல்

இந்த ஆவணப்படத்தின் சிறப்புத் திரையிடல் மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு அண்மையில் சென்னையில் பள்ளி மாணவர்களுக்காக நடைபெற்றது. ஒளிப்பதிவை அருண் சுரேஷ் மேற்கொண்டுள்ளார். யானி இசையமைத்துள்ளார். ‘ஊர் கூடும் இரவு’ ஆவணப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், சர்வதேசத் திரைப்பட விழாக்களிலும் திரையிடப்பட உள்ளது.

இதுகுறித்து இயக்குநர் ரம்யா ஸ்ரீராம் கூறுகையில், “தெருக்கூத்துக் கலைஞர்களின் வாழ்வியல் வித்தியாசமானது. அவர்களுடன் நெருங்கிப் பழகும்போதுதான் அவர்களின் வாழ்க்கையை முழுமையாக உணர முடிந்தது. வலி நிறைந்த அவர்களின் வாழ்க்கையை இந்த ஆவணப்படத்தின் மூலம் காட்சிப்படுத்தியுள்ளேன். இது அனைவரும் பார்க்க வேண்டிய படைப்பு” என்றார்.

SCROLL FOR NEXT